1970களில் திரையுலகுக்கு வந்தவர் ரிஷிகபூர். பாபி என்ற இந்தி படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் ஜோடியாக நடித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்தியில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டவர். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் ரிஷி கபூருக்கு தற்போது 67 வயது ஆகிறது. ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று இந்திய திரும்பினார்.
இந்நிலையில் நேற்று ரிஷி கபூருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை குடும்பத்தினர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர், டாக்டர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது உடல் நிலை தேறி வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவருக்கு இன்று காலை மூச்சுத் திணறல் அதிகமாகி இறந்தார்.சமீபத்தில்தான் ரிஷிகபூர் ஹாலிவுட் படம். தி இன்டர்ன் இந்தி ரீமேக்கில் தீபிகா படுகோனுடன் நடிக்கவிருப்பதாக அறிவித் தார். மறைந்த இந்தி பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் ராஜ்கபூரின் 2வது மகன் ரிஷிகபூர் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷிகபூருக்கு நீட்டு கபூர் என்ற மனைவி, ரன்பீர் கபூர் என்ற மகன், ரித்திமா கபூர் என்ற மகள் உள்ளனர்.
நேற்றுதான் இந்தி நடிகர் இர்பான்கான் இறந்தார். இன்று ரிஷி கபூர் இறந்திருப்பது மும்பை திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரிஷி கபூர் மறைவுக்கு அமிதாப்பச்சன், ரஜினி காந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.