கொரோனா தொற்று ஊரடங்கில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறப்புக்கு ரஜினி காந்த் எதிர்ப்பு தெரிவித்தார். 'மதுக்கடைகள் திறந்தால் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள்' என்று கூறினார்.அதற்குப் படத் தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி டி. செல்வகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது :கொரொனா வைரஸ் பாதிப்பின் காரணமாகத் தனித்திரு '' விழித்திரு'' விலகி இரு '' என்று அனைவரும் சொன்னார்கள்.. ஆனால் ஏழையோடு இருங்கள் என்று கடந்த 40 நாட்களாக ஏழை எளிய மக்களுக்குத் தினமும் ஒரு உதவி செய்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையைக் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாகத் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வந்தோம்.
இந்த நேரத்தில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பாக கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக மனது கேட்காமல் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தோம். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று அந்த கோரிக்கையில் முன்வைத்தோம். உடனடியாக அந்தக் கருத்தைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு மக்கள் மீது அக்கறை கொண்டு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது மீண்டும் திறந்தால் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் என்று ரஜினி அறிக்கை வெளியிட்டது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி ஒரு சூப்பர் ஸ்டாரை தான் தமிழக மக்கள் எதிர்பார்த்தோம் அவருடைய வார்த்தைக்கு வலுவும் ஆட்சியை மாற்றும் வல்லமையும் உண்டு என்பது நமக்குத் தெரியும் அவருடைய ரசிகர்கள் சார்பாகவும் ஏழை எளிய மக்கள் சார்பாகவும் நானும் அவருக்குக் கோடான கோடி நன்றியைக் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பி. டி. செல்வகுமார் கூறினார்.