கொரோனா லாக்டவுன் திரையுலகுக்கு ஒரு பக்கம் பெரிய அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரபல நடிகர்களையும் சுருட்டி வாயில் போட்டிருக்கிறது கோலிவுட்டில் பிரபல இயக்குனர் விசு கொரோனா காலத்தில் இறந்தார். பாலிவுட் பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் ஆகியோரை இழந்தது. தற்போது கன்னட திரையுலகம் பிரபல காமெடி நடிகர் மைக்கேல் மதுவை இழந்திருக்கிறது.
நடன இயக்குனரான இவர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர் அதனால் தனது பெயருடன் மைக்கேல் என்ற பெயரை சேர்த்துக் கொண்டார். ஆனால் இவர் காமெடி நடிகராக பிரபலமானார். 51 வயதாகும் மைக்கேலுக்கு பெங்களூரில் உள்ள வீட்டில் நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் உயிரிழந்தார். சிவா ராஜ்குமாரின் ஓம் படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகி பிரபலம் அடைந்த மது சுமார் 300 படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மனைவி 2 மகள்கள் உள்ளனர். கொரோனா தடை காலத்தில் இறந்ததால் இவரது இறுதிச் சடங்கில் திரையுலகினர் பங்கேற்கவில்லை. இணைய தளம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.