கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர் ஜீத்து ஜோசப். கார்த்தி, ஜோதிகா அக்கா -தம்பியாக நடித்த தம்பி படத்தையும் இவர் இயக்கினார். மலையாள இயக்குனரான ஜீத்து ஜோசப் ஏற்கெனவே மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தை இயக்கியவர். இப்படம்தான் தமிழில் பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லால் நடிக்கும் ராம் என்ற படத்தை இயக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஜீத்து அறிவித்தார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க ஒப்பந்தம் ஆனார். சில தினங்கள் படப்பிடிப்பும் நடந்தது. இந்நிலையில் ராம் படத்தை இயக்குனர் டிராப் செய்துவிட்டு புதிய படம் இயக்க ஒப்புக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியானது.
இது குறித்து ஜீத்துஜோசப் கூறும்போது,”கடந்த இரண்டு மூன்று தினங்களாக மோகன்லால் நடிக்கும் ராம் படத்தை டிராப் செய்துவிட்டு புதிய படத்தை நான் இயக்க விருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. ராம் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பிரச்சனை முடிந்ததும் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். இங்கிலாந்து உஸ்பெகிஸ்தானில் இதன் படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளது. கொரரோனா கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் கேரளா முக்கிய இடம் வகிக்கிறது. எனவே இங்கு ஷூட்டிங் நடத்த விரைவில் அனுமதி கிடைக்கும் சூழல் உள்ளது. இதற்கிடையில் கேரளாவுக்குள்ளேயே ஒரு படத்தை எடுத்து முடிப்பது பற்றி ஆலோசித்து வருகிறேன். இப்படிச் சொல்வதால் ராம் படத்தை கைவிட்டுவிட்டேன் என்று அர்த்தமல்ல” என்றார் .