சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்ததுடன் பிரபுதேவா நடித்த , தேவி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் சோனு சூட். மேலும் பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் தான் இவர் வில்லன் நிஜத்தில் ஹீரோவாகி இருக்கிறார். அதுவும் கொரோனா பாதித்துள்ள இந்தச்சூழலில் அவர் செய்துவரும் சேவை பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
வெளி மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து மும்பையில் வேலை செய்து வந்த பல்லாயிரக் கணக்கானவர்கள் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் தவித்தனர். உணவின்றி, தங்க இடமின்றி தவித்தவர்களை அவர்களின் சொந்த ஊருக்குத் தனது சொந்த செலவில் அனுப்பி வைப்பேன் என்று கூறியிருந்தார் சோனு சூட். அதுபோல் நூற்றுக்கணக்கானவர்களைத் தனி பஸ்கள் ஏற்பாடு செய்து பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் வட மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு வந்து வேலை செய்துகொண்டிருந்த 177 பெண்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். இதையறிந்த சோனு அந்த பெண்களுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் சிறப்பு அனுமதி பெற்றுத் தனி விமானத்தில் அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் ஒரிசா சென்றடைந்த விமானத்திலிருந்து அவரவர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்வதற்காக போக்குவரத்து ஏற்பாடும் செய்து தந்தார்.
ஏற்கனவே சோனுசூட் மும்பையில் உள்ள தனது 6 மாடி ஓட்டலில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார தொழிலாளர்கள் தங்குவதற்காக அனுமதி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சோனுவின் இந்த உதவிகளை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணி பாராட்டி உள்ளார்.