சென்னையில் 2 பிரபல தியேட்டர்கள் மூடப்படுகின்றன.. தயாரிப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

Shock Report: Two Popular cinema theatre to be closed in Chennai

by Chandru, Jun 11, 2020, 15:42 PM IST

பட தயாரிப்பாளர் கஸாலி. இரண்டு பிரபல தியேட்டர்கள் மூடப்படவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஏ.வி.எம். ராஜேஸ்வரி மற்றும் மஹாராணி ஆகிய திரையரங்கங்கள் நிரந்தரமாக மூடப்படப் போவதாகத் தகவல் வந்திருக்கின்றன. ஏன் மூடுகிறார்கள்? கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர் ஓடவில்லை, சம்பளம் கொடுக்க முடியவில்லை என்பது பெரிய காரணமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம், ஒவ்வொரு தியேட்டரிலும் ஆப்பரேட்டர்கள், காவலாளி, வாகன டோக்கன் ஆள், கேண்ட்டீன் ஆட்கள், பராமரிப்பு ஆட்கள் என்று 10-15 பேர் வரை தான் இருக்க வாய்ப்புண்டு. பல தியேட்டர்களில் கேண்ட்டீன் என்பது கான்ட்ராக்ட்டில் இயங்குகிறது. எனவே அவர்களுக்கான சம்பளப் பிரச்சனையும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இல்லை.


தியேட்டர் வாடகை..? பெரிய காரணமாக இருக்க வாய்ப்பில்லை. உலகமே முடங்கிக் கிடக்கும்போது யாரும் வாடகை கேட்டுக் கழுத்தில் கத்தி வைப்பதில்லை. பிறகு நல்ல கூட்டம் வரும் தியேட்டர்களை மூட முடிவு செய்ததற்கு என்னதான் காரணமாக இருக்க முடியும்? வருடாந்திர வரவு செலவுக் கணக்கில் ஏற்படும் நஷ்டம் மிகப் பெரிய காரணம் என அறிகிறேன். ஏ.வி.எம்.ராஜேஸ்வரி உரிமையாளர் பல வருடங்களாக லட்சங்களில் கைக் காசு போட்டு நடத்திக் கொண்டிருந்ததாகக் கேள்வி. ஆசையுடன் அதனை ஆரம்பித்தவரின் நினைவாக நஷ்டமானாலும் பரவாயில்லை என்ற கொள்கையில். இப்போது தாக்குப் பிடிக்க முடியவில்லை.

மஹாராணி தியேட்டர் உரிமையாளருக்கு வயதாகி விட்டது. தன் இறுதிக் காலம்வரை நடத்த வேண்டும் என்ற முனைப்புக் காட்டினார். ஆனால், கடந்த வருடக் கணக்குப் படி அவருடைய நஷ்டம் சுமார் 45 லட்சம். நஷ்டத்தின் பிரமாண்டம் கண்ணைக் கட்டி இழுக்க, நிரந்தரமாக மூடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். விரைவில் இவர்களை முன் மாதிரியாகக் கொண்டு மேலும் பல சிங்கிள் தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் உண்டு.
படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் பெருமளவில் நஷ்டப்படுகிறார்கள். சிங்கிள் தியேட்டர்களை நடத்தும் உரிமையாளர்கள் அல்லது லீஸ் எடுத்து நடத்துபவர்கள் பாதிக்கு மேல் நஷ்டப்படுகிறார்கள். எல்லா விநியோகஸ்தர்களும் லாபத்தில் இயங்குகிறார்களா என்பது கேள்விக்குறி.

சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்பவர்கள் பல நேரம் வட்டியையும், சில நேரம் கொஞ்சம் அசலையும் விட்டுக் கொடுத்துத் தொழில் செய்யும் செய்திகளையும் அவ்வப்போது கேள்விப்படுகிறோம். எனில், படங்களின் தயாரிப்புக்குச்செய்யப்படும் செலவு காசும், விற்பனை மூலம் வரும் காசும் எங்குச் செல்கின்றன? தயாரிப்பு, ஃபைனான்ஸ், விநியோகம், தியேட்டர் என்று அனைத்து நிலைகளின் வரவு செலவு விபரங்களையும் ஆராய்ந்து லாபத்திற்கான பாதையை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி, பழி போட்டு நிலைமையை மேலும் மோசமாக்குவதில் பயனில்லை. இந்த இரண்டு தியேட்டர்களோடு போகட்டும். இனியொரு தியேட்டர் மூடப்படக் கூடாது. வரும் காலத்தில் மேலும் பல மினி தியேட்டர்கள் உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, தயாரிப்பாளர்கள், திரையரங்கத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து விபரங்களைத் திறந்த மனதுடன் கேட்டு, விவாதிக்க வேண்டும். சுமூகமான வியாபார நிலையை ஏற்படுத்தியே தீர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You'r reading சென்னையில் 2 பிரபல தியேட்டர்கள் மூடப்படுகின்றன.. தயாரிப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை