திரைப்பட மற்றும் டிவியில் நடிக்கும் தேவயானி கணவர், குழந்தைகளுடன் கிராமத்தில் குடியேறினார், அரசின் கொரோனா விழிப்புணர்வு விளம்பரப் படத்தில் தற்போது நடித்திருக்கிறார். எல்லா டிவியிலும் இது ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.
விளம்பர படத்தில் நடிப்பது கிராமத்தில் குடியேறியது பற்றி நடிகை தேவயானி கூறியதாவது:கொரோனா போன்ற நெருக்கடியான காலத்தில் கலைஞர்கள் மக்களிடம் பாடலின் மூலமும் குறும்படங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது.இந்த வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதில் தேசிய விருது பெற்ற ஆடுகளம் ஜெய பாலனுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒரு தந்தை மகளுக்கான பாசத்தோடு இந்த விளம்பரம் அமைந்திருக்கிறது.
"பாரதி" படத்தில் நான் நடித்தபோது எனக்கு மருமகனாக நடித்தவர் இ.வி.பாபுகணேஷ். தற்போது "கட்டில்" படத்தை இயக்குகிறார். தற்போது நான் பங்கேற்ற "கவசம் இது முகக்கவசம்" பாடலையும் இந்த விளம்பரம் படத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார். செழியன் குமாரசாமி தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்கிறார்.
ஊரடங்கு காலகட்டத்தில் எனது குடும்பத்தோடு நான் அந்தியூர் அருகிலுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். இடைப்பட்ட நாட்களில் அரசு அனுமதியோடு சென்னைக்கு வந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்துச் சென்றிருக்கிறேன்.
கிராமங்களின் வாழ்க்கையை முழுமையாக நான் இப்போது அனுபவித்து வருகிறேன். தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது. கிராமத்துச் சமையல் செய்வது, குழந்தைகளோடு, கணவனோடு விளையாடுவது, தினமும் இரவு நேரத்தில் என் மூத்த மகள் பகவத்கீதை வாசிக்க அதை நாங்கள் குடும்பத்தோடு கேட்பது, குழந்தைகளுக்கான கல்வி இப்படி வாழ்க்கையின் அர்த்தங்களை முழுமையாகச் செயல்படுத்தி வருகிறோம். மகாபாரதம், ராமாயணம் போன்ற தொடர்கள் தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பாகிறது. இதை குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்து வருகிறோம்.கொரோனா வைரஸிடமிருந்து நாமெல்லாம் மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் முழுவீச்சுடன் நான் செயல்படுவேன். நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காக நான் காத்திருக்கிறேன். தமிழக மக்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்.
இவ்வாறு தேவயானி தெரிவித்தார்.