நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்தே மும்பையில் உள்ள வீட்டில் தனிமையில் இருக்கிறார், துணைக்கு ஒரு பூனைக் குட்டி மட்டும் வைத்து அதனுடன் விளையாடி பொழுதைக் கழிக்கிறார். மற்ற நேரங்களில் இசையில் லயிப்பது, பாடல்கள் பாடி வீடியோ வெளியிடுவது, யோகா செய்வது, ஹைஜீனிக்கான ஆடம்பர உணவுகளைச் சமைப்பது எனப் பொழுதை போக்குகிறார். தற்போது புதிய பொழுதுக்கு மாறியிருப்பதுடன் தனக்குத் தெரிந்த மற்றொரு கலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் வெளியில் செல்லும்போது முககவசம் அணிந்து செல்லவேண்டும் என்ற பழக்கத்துக்கு பெரும்பாலான மக்கள் மாறியிருக்கிறார்கள். ரோட்டோரத்தில் 5 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த மாஸ்க் தற்போது கார்ப்பரேட் கம்பெனிகள் தயாரிக்கும் அளவுக்கும் ஒரு மாஸ்க் 50ரூபாய், 100 ரூபாய் என்ற ரேஞ்சிக்கு விற்கத் தொடங்கியிருக்கின்றனர். தற்போது ஸ்ருதி ஒரு புதிய ஐடியா கற்றுத் தருகிறார். சராசரி விலையுள்ள மாஸ்க்கை எப்படி காஸ்ட்லியாக மாற்றுவது, பார்த்தவுடன் எப்படி பார்வையை இழுக்கும் வகையில் இருக்கச் செய்வது, அணிய ஆர்வத்தைத் தூண்டுவது எப்படி என்ற வகையில் கறுப்பு நிற மாஸ்க்கில் வண்ணமயமான பட்டர்ஃபிளை டெய் பிரிண்ட் செய்து, எம்பிராய்டரி வேலைகள் செய்தும் ஜமாய்த்திருக்கிறார். அதை அணிந்து கவர்ச்சியான மாஸ்க் அணிவது எப்படி என்று நெட்டில் போஸும் தந்திருக்கிறார்.
இது பற்றி கூறிய ஸ்ருதி "என் முக மூடிக்குத் தேவை என்பதால்.. என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு மெசேஜில். கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள் அதுவும் வித்தியாசமாக அணியுங்கள், நான் முயற்சித்தேன் மீண்டும் அடுத்தடுத்து இந்த முயற்சி தொடரும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்ருதி முகமூடிக்கு மட்டுமல்ல மாஸ்க் விரும்பிகள் அனைவருக்குமே இது தேவையான ஆலோசனைதான் என ரசிகர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர். ஸ்ருதிஹாசன் தற்போது லாபம் (தமிழ்), யாரா (இந்தி), கிராக் (தெலுங்கு) என 3 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.