நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக 2017 ம் ஆண்டில் சிங்கம்3 படத்தில் சூர்யாவுடன் நடித்தார். அதன்பிறகு சுந்தர்.சி. இயக்கும் சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு வாள் பயிற்சி, குதிரை ஏற்றப் பயிற்சி பெற்றார். ஆனால் படத் தரப்பினருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அப்படத்திலிருந்து விலகினார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். லண்டன் பாய்பிரண்டுடன் டேட்டிங் செய்துவந்தவர் பிறகு அவரிடம் பிரேக் அப் செய்து கொண்டார். பின்னர் மேற்கத்திய இசைப் பாடகி போல் வெளிநாட்டு மேடைகளில் ஆங்கில பாடல்கள் பாடி வந்தார். எல்லாம் முடிந்து சுமார் ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்தார்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் கிராக் படத்தில் நடித்தார், இப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். ஏற்கனவே ரவி தேஜா நடித்த டான் சீனு, பலுபு ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் இவர்.
கடந்த ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது படத்தை ஒடிடி டிஜிட்டல் தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு ரவி தேஜா ஒப்புதல் தந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்காக டிஜிட்டல் தளத்துடன் படத் தரப்பு பேச்சு நடத்துகிறது. ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதுபற்றி ஓரிரு வாரத்தில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஸ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் சித்து ஜொன்னலகட்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா, படம் ஒடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தெலுங்கில் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியையடுத்து தயாரிப்பாளர்களின் பார்வை ஒடிடி தளம் பக்கம் திரும்பி இருக்கிறது. சுமார் 2 வருடத்துக்குப் பிறகு ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் கிராக் படம் ரசிகர்களுக்கு விருந்தாக தியேட்டரில் வெளியாகாமல் ஒடிடி தளத்தில் வெளியாவது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இப்படத்தில் மேலும் வரலக்ஷ்மி சரத்குமார், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்,