ஹீரோக்களுக்கு இயக்குனரின் உருக்கமான வேண்டுகோள்...

Ratinam Director Thanfanasami Request Heros To Help Indusry People

by Chandru, Jul 14, 2020, 19:57 PM IST

எட்டு திக்கும் மதயானை, ராட்டினம் படங்களை இயக்கி தயாரித்தவர் கே.எஸ்.தங்க சாமி. அவர் பிரபல ஹீரோக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருகிறார். அவர் கூறியிருப்பதாவது:2020 ம் ஆண்டு பிறக்கும் போது யாருமே இது போன்ற பேரிடர் நம்மை நெருங்க போகிறது என்று நினைத்துக் கூட பார்த்து இருக்க வாய்ப்பில்லை. புத்தாண்டு சபதங்களும், புது வருடத் திட்டங்களும் கனவுகளும் என்று அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்த வருடத்தை வரவேற்றோம்.

ஆனால் கணக்குகள் அனைத்தும் தலைகீழ் விகிதங்கள் என்ற நிலையில் உலகமே விக்கித்து நிற்கிறது. நோய் ஒரு பக்கம் என்றால் அதை விட மிகக் கொடிய பொருளாதார சிக்கல்கள் சாமான்யர்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலுமாக குலைத்துப் போட்டு விட்டன. செலவுகள் அப்படியே இருக்கின்றன, வருமானம் அன்றாட அடிப்படை செலவுக்குக் கூட இல்லையென்றால் என்ன நடக்கும்? குடும்பத் தலைவிகள் என்ன தான் செய்ய இயலும்! வெளியில் செல்லுபடியாகாத தன் குமுறலை ஆண்கள் வீட்டில் காட்ட அதன் விளைவாகப் பல சிதறல்கள். நீங்கள் தினசரி செய்திகளை கவனம் அளித்துப் படிப்பவராக இருந்தால் கடந்த இரண்டு மாதங்களாக குடும்ப வன்முறைகள், தற்கொலைகள், சண்டைகள்,கொலைகள் அதிகம் இருப்பதை உணருவார்கள். சகமனிதரின் துன்பங்கள் என்னைச் செயல் இழக்கச் செய்கின்றன. ஒவ்வொரு நாளும் இதற்குத் தீர்வு எப்போது என்று யோசித்து மருகுகிறேன்.

நான் சார்ந்து இருக்கும் திரையுலகில் இருந்து ஒவ்வொரு நாளும் நான் கேள்விப்படும் விஷயங்கள் என்னை அழுத்துகின்றன. என்னிடம் உதவி கேட்டு வரும் அழைப்புகள் என்னைத் தூங்க விடுவதில்லை. நான் சொல்லிப் படப்பிடிப்பில் பல நூறு சாப்பாடுகள், காப்பி, டீக்கள் சலிக்காமல் வாங்கி வந்தவர்கள் இன்று அடுத்த வேளை உணவுக்குச் சிரமமாக இருக்கிறது என்று போனில் சொல்லும் போது எனக்குள் ஏற்படும் வலியின் விளைவே இந்த பதிவு. சொல்லப்போனால் இன்று திரையுலகினர் சந்திக்கும் சிரமங்களும் சூழ்நிலைகளும் ஒரு தொடர் நாவலில் எழும் பல கதைகளாக எழுதப்பட வேண்டியவை. தன் விதி இவ்வாறு நிர்ணயிக்கப்படுவதைத் தவிர்க்க இயலாது தவிக்கும் கதாபாத்திரங்களின் தவிப்பில் எழுதப்படும் நாவலாக அது அமையக் கூடும். வெளியில் இருந்து நோக்குபவர்களுக்கு இது வெறும் ஸ்டுடியோவும் சினிமாவும் ஆக மட்டுமே தெரியலாம். நிதர்சனம் அதுவல்ல. ஒளிரும் திரைக்குப் பின்னால் அந்த ஒளிக்குக் காரணமான பல ஆயிரம் மின்மினிகளின் உழைப்பு இருக்கின்றது, ஒவ்வொரு துளியிலும்! அவர்கள் படும் பாடுகளை நன்றாக அறிந்தவன் என்ற வகையில் விழித்திருந்தாலும் தூங்கினாலும் சிந்தித்தாலும் பேசாமலிருந்தாலும் என்னால் இதை எளிதாகக் கடந்து போக முடியாது.

நியாபகத்தில் கொள்ளுங்கள். சினிமா என்பது மற்ற வேலைகளைப் போல் அல்ல. படப்பிடிப்பு இருந்தால் தான் அனைத்துமே, இல்லையென்றால் ஒன்றுமே கிடையாது. ஒவ்வொரு படமும் முடியும் போது அத்துடன் அந்த படத்தில் வேலை செய்தவர்களுக்கும் வேலை முடிந்து விடும். வேலைதான் முடிந்து விடுகிறதே தவிர, செலவுகளும் அன்றாட பிரச்சனைகளும் முடிந்து விடுமா என்ன? அது தலைக்கு மேல் வைக்கப்பட்ட கத்தி போல் ஒவ்வொரு சினிமா தொழிலாளனின் வாழ்விலும் தொடர்ந்து கொண்டு தான் வரும். கடந்த மூன்று மாதங்களாக எந்த வேலையும் நடக்கவில்லை. பலருக்கு ஏற்கனவே வரவேண்டிய தொகையும் வரவில்லை. என்ன செய்வார்கள்? இந்த நேரத்தில் அவர்களுக்குச் செய்யப்படும் உதவிகள் காலத்தால் மறையாத நினைவுகளாக அவர்களின் உள்ளத்தில் நிலைத்து இருக்கும். இதை நிச்சயமாகச் சொல்ல முடியும். திக்கு தெரியாமல் பல காலம் அலைபவனுக்கு கை பிடித்து வழி காட்டுவது போன்ற உதவி இது.சினிமாவின் வழியாகக் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பணம், பெயர், புகழ் அனைத்தும் ஒருசேரப் பெற்றவர்கள் ஏராளம். இந்த நேரத்தில் உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.வேண்டுகோளும் விடுக்கிறேன்.

அதே போல் மற்றவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு. சிறிது பின்னோக்கி நம் முன்னோர்களைப் பார்த்தோம் என்றால், அன்று ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் மட்டுமன்றி உறவினர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என அனைவரும் இருப்பார்கள். மிக மிகக் குறைந்த வருமானமே உள்ள போதும் முகம் சுளிக்காமல் அனைவருக்கும் உணவு, உடை, இடம் அளித்த முன்னோர்களின் வரலாறு நம்முடையது என்பதை இங்கு நினைவு படுத்துகிறேன். உங்களில் பலருக்கு திரையுலக நண்பர்கள் இருப்பார்கள். திரையுலகில் பணியாற்றும் உறவினர்கள் இருக்கலாம்.சிலர் உங்களிடம் உதவி கேட்டு இருக்கலாம். பலர் தயக்கத்தினாலோ வெட்கம் கூச்சத்தினால் உங்களிடம் இது பற்றிப் பேசாமல் இருந்து இருக்கலாம். அவர்களைப் போனில் அழைத்துப் பேசுங்கள்.

உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாமே. நினைத்துப் பாருங்கள், அடுத்த மூன்று வேளை உணவிற்கு என்ன செய்வது என்ற நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்தில் நீங்கள் வாங்கி கொடுக்கும் ஒருமாத மளிகை அளிக்கும் சந்தோஷத்தை, மலர்ச்சியை வார்த்தையில் சொல்லி விட இயலுமா!! வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவிக்கும்
உள்ளங்களுக்கு நீங்கள் ஒரு மாத வாடகை உதவினால் அந்த குடும்பம் அந்த மாதம் முழுவதும் நிம்மதியாகத் தூங்க வாழ வழி செய்கிறீர்களே. இந்த பேரிடர் காலத்தில் நீங்கள் செய்யும் குறைந்த பட்ச உதவிகள் கூட பெரிய அளவில் அவர்களின் வாழ்வில் நிம்மதியை, அமைதியை ஏற்படுத்தக் கூடும் என்பதை நினைவில் வையுங்கள். இறுதியாக ஒன்று,இக்கட்டான நிலையில் செய்யப்படும் உதவி தெய்வங்களால் நினைக்கப்படும்.
இவ்வாறு கே.எஸ்.தங்கசாமி தெரிவித்திருக்கிறார்.

You'r reading ஹீரோக்களுக்கு இயக்குனரின் உருக்கமான வேண்டுகோள்... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை