ஊரில் சினிமா தியேட்டர்கள் வைத்திருந்தாலே தியேட்டர் ஓனருக்கு நல்ல மரியாதை. ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் சலாம் போடுவார்கள் . அப்படி தஜா செய்து வைத்துக் கொண்டால் தான் புதிய படங்கள் வரும்போது ஒனரை பார்த்து உடனே டிக்கெட் வாங்க முடியும்.கீற்றுத் திரை அரங்கம் எனப்படும் டென்ட் கொட்டகை, ஏ/சி வசதி இல்லாத தியேட்டர். ஏ/சி வசதியுடன் தியேட்டர், 100 பேர் வரை அமர்ந்து பார்க்கும் தியேட்டர் முதல் 1000பேர் அமர்ந்து பார்க்கும் தியேட்டர் எனப் பெரிய மற்றும் மினி தியேட்டர்கள். 70 எம் எம் தியேட்டர், டிரைவ் இன் தியேட்டர் என வகை வகையாக தியேட்டர்கள். தரை டிக்கெட், பெஞ்ச், சேர் கட்டண தர வரிசைப்படி அமரும் வசதி கொண்ட தியேட்டர். குஷன் இருக்கை வசதி. பால்கனி என பல மாறுபட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்ட தியேட்டர்கள் பின்னர் டிடிஎஸ் வசதி, டால்பி அட்மாஸ் எனப் பல தரப்பட்ட சவுண்ட் சிஸ்டத்துடன் நவீன தியேட்டர்கள்.
ஒரே வளாகத்துக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் என்றிருந்த நிலையும் மாறி தற்போது மால்களில் மல்டி பிளாக்ஸ் தியேட்டர்கள் வரை பல பரிணாம வளர்ச்சியை சினிமா தியேட்டர்கள் பெற்றிருக்கின்றன. டிக்கெட் கட்டணங்கள் அதிகம் என்றாலும் எல்லாமே ரசிகர்களின் வசதியை மனதில் வைத்தும் படங்களின் பிரமாண்டத்தில் திரையில் காட்ட வேண்டும் என்ற நோக்குடன் செய்யப்பட்டது தான். பிலிம் ரோலில் சுழன்றுகொண்டிருந்த புரொஜக்ஷன் மிஷினை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு இன்றைக்கு டிஜிட்டல் புரொஜக்ஷன் அல்லது கியூப் ப்ரொஜக்ஷன் என்ற நிலைக்கு வந்து விட்டது. எல்லாமே மாறினாலும் மாதக் கணக்கில் அதுவும் ஒரு மாதம், இரண்டு மாதமல்ல 5 மாதம் தியேட்டர்களை மூடி வைக்க வேண்டிய நிலை வரும் என்று யாருமே கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். கொரோனா ஊரடங்கால் எல்லா தியேட்டர்களுக்கும் பூட்டு போட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய படங்கள் வெளியாவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
விஜய் நடித்துள்ள மாஸ்டர், சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று என ஸ்டார் படங்கள் முதல் இளம் நடிகர்கள் படம் வரை முடித்தும் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மாஸ்டர், சூரரைப்போற்று மட்டுமல்லாமல் பல படங்களை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று காத்திருக்கின்றனர். ஆனால் ஒரு சில படங்கள் அதற்காகக் காத்திருக்காமல் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தியின் பெண்குயின், யோகி பாபுவின் காக்டெயில் ஒடிடியில் ரிலீஸ் ஆனது. அடுத்து வரலட்சுமி நடித்துள்ள டேனி படங்கள் ரிலீஸ் ஆகிறது,. இன்னும் பல படங்கள் ஒடிடியில் வெளியாகப் பேச்சு நடக்கிறது.
ஒடிடி தளங்கள் தியேட்டர்களை அழித்து விடுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதற்கு தியேட்டர்காரர்கள் கூறும் பதில் தியேட்டர்களை ஒழிக்க முடியாது என்பது தான். ஆனாலும் வசூலில் கண்டிப்பாக இழப்பு ஏற்படும்.
புதிய படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் ஒடிடி தளங்களில் வெளியிடுவதற்கு தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது.பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட சில படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். தியேட்டருக்காக தயாரிக்கப்படும் படங்கள் தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் அதன் பிறகு தான் பிற தளங்களில் வெளியிட வேண்டும் என்ற விதி இருக்கிறது, அதை மீறி நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியிடுவதை கண்டிக்கின்றோம்.
புதிய படங்களை தியேட்டரில் தான் முதலில் வெளியிட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் சொன்ன போது அதை அவர் ஏற்கவில்லை. தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஒடிடியில் வெளியிடும் தயாரிப்பாளர் தயாரிக்கும் படம் மற்றும் அந்நிறுவனம் தொடர்பான பிற படங்களை இனி தியேட்டரில் வெளியிட மாட்டோம். அவர்கள் அதை ஒடிடி தளத்திலேயே வெளியிட்டுக்கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டோம். இவ்வாறு கறாராக கூறினார் பன்னீர்செல்வம்,ஒடிடியில் படங்கள் ரிலீஸ் தொடர்பாக ஹீரோக்கள் யாரும் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கவில்லை. பெரிய ஹீரோக்கள் தங்கள் படங்களை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறார்கள் என்பது அவர்களது தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் ஒடிடி தளத்தை வரவேற்கின்றனர்.
ஒ கே கண்மணி, தெறி போன்ற பல படங்களில் நடித்திருக்கும் நடிகை நித்யா மேனன் ஒடிடி பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறும்போது,ஒடிடி தளங்களில் திரைப்படங்களைப் பார்ப்பது என்பது ஒரு தியேட்டருக்குச் சென்று ஒரு திரைப்படத்தைப் பெரிய திரையில் பார்த்த முழு அனுபவத்தையும் எதுவும் மாற்ற முடியாது என்று நான் நினைக்கவில்லை. அது வேறு அனுபவம். ஆனால் இப்போது OTT தளங்கள் சினிமா அடிப்படையில் ஆரோக்கியமான போக்கைத் தொடங்கியுள்ளன.சில நேரங்களில், திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட தேக்கம் ஏற்படுகிறது, ஒடிடி அனைவருக்கும் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. அனைவருக்கும் ஏதாவது இருக்க வேண்டும், எனவே OTT இதைத் தான் செய்கிறது. இது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார் நித்யா மேனன்.
வீடியோ வந்தபோதும் சரி, டிவிக்களில் படங்கள் நாள் ஒன்றுக்கு 50 படங்கள் ஒளிபரப்பிடும்போதும் சரி,கைப்பேசியில் படங்கள் வந்த நிலையிலும் சரி தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கி கொறித்துக்கொண்டே படம் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும் வரை சினிமாவில் படம் பார்க்கும் தியேட்டர்கள் அழியப்போவதில்லை. வேண்டுமானால் தியேட்டர்கள் இன்னும் நவீன மயம் ஆகும்.