வாழ்க்கையில் ஒரு முறையாவது தேசிய விருது வாங்கி விட வேண்டும் என்று எல்லா நடிகர், நடிகை,இயக்குனருக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக இயக்குனர்களுக்கு அந்த கனவு நிச்சயம் இருக்கும். கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, கமல்ஹாசன், தனுஷ், ஸ்ரீதேவி, கீர்த்தி சுரேஷ் போன்ற குறிப்பிட்ட சில இயக்குனர்கள், நடிகர். நடிகைகள் இது போன்ற விருதுகளைத் தட்டி வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட கவுரவத்தைப் பெற்றவர்களுக்கு அடுத்தடுத்து சிறந்த படங்களைத் தர வேண்டும் என்ற உத்வேகம் என்றைக்கும் நிலைத்திருக்கும். பேரைக் கேட்டாலே சும்மா அதிருதல்ல என்பது போல் இவர்களின் பெயர்களைக் கேட்டாலே ஒரு அதிர்வு ஏற்படும் அந்த வரிசையில் இடம் பிடித்தவர்தவர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மா.
1999ம் ஆண்டு இந்தியில் இயக்கிய ஷூல் என்ற படத்திற்காகத் தேசிய விருது வென்றார். இப்படத்தில் மனோஜ் பாஜ்பாய், ஷாயாஜி ஷிண்டே, ரவீனா டாண்டன் நடித்திருந்தனர்.
முன்னதாக 1989ம் ஆண்டு இவர் இயக்கிய சிவா, பின்னர் இயக்கிய ஷணம் ஷணம் (1991) உள்ளிட்ட 5 படங்களுக்கு ஆந்திராவின் நந்தி விருது. ரங்கீல்லா (1995), சத்யா (1998), கம்பெனி (2003), பூத் (2004), சங்கர் (2006) என 5 படங்களுக்கு ஃபிலிம் பேர் விருது பெற்றார் வர்மா.
இந்த, தெலுங்கு படங்களை இயக்கிய இவர் நம் மொழியில் ஒரு படம் இயக்க மாட்டாரா என்று ரசிகர்கள் எதிர் பார்க்கும் அளவுக்கு வர்மா தனது புகழை மெருகேற்றினர். தமிழில் மணி ரத்னம் இயக்கிய திருடா திருடா படத்திற்கு கதை எழுதினார். அது போல் ஜித்தன் படத்திற்கும் கதை எழுதினார். மேலும் வர்மா இயக்கிய ரத்த சரித்திரம் இந்தி படத்தில் சத்ருகன் சின்ஹா, விவேக் ஓபராயுடன் நடிகர் சூர்யாவும் நடித்திருந்தார். இப்படம் தமிழில் மொழிமாற்றம் ஆகி வந்தது.
அமிதாப்பச்சன் நடித்த சர்க்கார் (2005), ராண்(2010), சர்கார்ராஜ் (2008), நிசப்த்(2007), சர்க்கார் 3(2017), ஆக் (2007). டிபார்ட்மெண்ட் (2012) ஆகிய படங்களை வர்மா இயக்கி உள்ளார். வர்மா என்றால் ரவுடி கதை, அண்டர்வேல்ட் தாதா கதைகளை இயக்குபவர் என்ற பெயர் இருந்தது. ரங்கீலா என்ற சூப்பர் ஹிட் காதல் படத்தை அளித்து டான் பட இயக்குனர் என்ற முத்திரையை மாற்றினார்.ராம் கோபால் வர்மா என்ற பெயருக்கு இருந்த கெத்து மெதுவாகச் சரியத் தொடங்கியது. அவர் இயக்கிய சில படங்கள் கடுமையான விமர்சனத்துக்குள்ளானதுடன் வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது. இதில் கடுப்பான வர்மா சில வருடங்கள் படங்கள் இயக்காமல் ஒதுங்கி இருந்தார். பிறகு பிரபல நடிகர், நடிகைகளைக் கடுமையாகத் தனது டிவிட்டர் பக்கங்களில் விமர்சிக்கத் தொடங்கினார். ஆனால் இவரைப் பற்றி எந்த விமர்சனம் வந்தாலும் அதைப் பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
ஒரு கட்டத்தில் வர்மா ஆபாசப் பட இயக்குனர் ரேஞ்சுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார். ஜிஎஸ்டி (காட் செக்ஸி அண்ட் ட்ருத்)படத்தைக் கடந்த 2018ம் ஆண்டு இயக்கினார். இதில் ஆபாசப் படங்களில் நடிக்கும் மியா மல்கோவா என்பவரை நடிக்க வைத்தார். இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்தது. பிறகு வெப் தளத்தில் அதனை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கிளை மாக்ஸ் என்ற அரை நிர்வாண படத்தை இயக்கி நெட்டில் வெளியிட்டார். தற்போது நேகட் நன்கா நக்னம் என்ற படு ஆபாசப் படத்தை இயக்கி வெப் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தேசிய விருது பெற்ற வர்மாவை இன்றைக்கு எல்லோரும் ஆபாசப் பட இயக்குனர் என்று வசைபாடி வருகின்றனர். ஆனால் அவரோ தேசிய விருது படங்களை இயக்கிய போது சம்பாதித்ததை விட பல மடங்கு அதிகமாக இந்த ஆபாசப் படங்கள் மூலம் கல்லா கட்டி வருகிறார். இழந்த பெயர், புகழை வர்மா திரும்பப் பெறுவரா? கபாலி ரஜினி பாணியில் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று சொல்லும் படியான கெத்தான படத்தை எடுப்பாரா என்றே பலரது கேள்வியாக இருக்கிறது. அதற்கான திறமையும் அதிரடி ஸ்கிரிப்டுடன் இருக்கும் பட்சத்தில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு கால்ஷீட் தரத் தயாராகவே இருக்கிறார்கள்.
தற்போது மிதுன் சக்ரவர்த்தியை வைத்து 12 ஒ கிளாக் என்ற படத்தை இந்தியில் இயக்குகிறார். ஏற்கனவே இப்படத்துக்கு கெஹர் என்று பெயரிட்டிருந்தார். அதை மாற்றி சமீபத்தில் தான் 12 ஒ கிளாக் எனப் பெயரிட்டு டிரைலர் வெளியிட்டார். படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. மதில் மேல் நிற்கும் பூனையாக இருக்கும் ராம் கோபால் வர்மா மீண்டும் கமர்ஷியல் படங்கள் பக்கம் வருவரா அல்லது ஆபாசப் பட இயக்குனராகவே இருந்து விடுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.