எல்லா அம்மாக்களுமே அப்படித் தான்!.. தன் தாயின் `செல்ல சங்கடத்தை பகிர்ந்த விராட் கோலி

Virat Kohli who shared his mothers pet embarrassment

by Sasitharan, Jul 25, 2020, 13:57 PM IST

உலக கிரிக்கெட் வீரர்களில் முதன்மையான வீரராகவும், ரன் மெஷினாகவும் விராட் கோலி இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது ஃபிட்டான உடல் தான். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகக் கடினமான உடற்பயிற்சிகள் மூலமும், உணவுப் பொருட்கள் `டயட்' மூலமாகவும் உடலை ஃபிட்டாக வைத்து வருகிறார் கோலி. இதனால் களத்தில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆனால் இந்த `ஃபிட்' உடலை நினைத்து தனது தாய் வருந்துவதாகச் சுவாரஸ்ய தகவலை தற்போது பகிர்ந்துள்ளார் கோலி.

லாக் டவுனால் வீட்டுக்குள் முடங்கியிருந்தாலும், அவ்வப்போது சக வீரர்களுடன் உரையாடும் கோலி, மாயங் அகர்வாலுடனான நேற்றைய உரையாடலில் இந்த சுவாரஸ்யத்தைச் சொல்லியுள்ளார். அதில், ``அம்மாவைப் பொறுத்தவரைக் குழந்தைகள் எப்போதும் குண்டாக இருக்க வேண்டும் என நினைப்பார். மெலிந்த தேகத்துடன், கன்னம் வற்றிப் போய் இருந்தால் குழந்தை உடலில் எதோ கோளாறு இருக்கிறது என நினைத்துக்கொள்வார். மைதானத்தில் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் உணவு விஷயத்தில் டயட் கடைப்பிடித்து வருகிறேன்.

கடந்த பத்து வருடங்களாக இதனைச் செய்து வருகிறேன். நான் இதை முதலில் செய்யத் தொடங்கிய சில நாட்களிலேயே அதற்காகப் பலன் தெரிந்தது. ஆனால் இதைப் பார்த்த என் அம்மாவோ, எனக்கு உடல் நிலை சரியில்லை என்று நினைத்துக் கொண்டார். ஒவ்வொரு நாளும் இதைச் சொல்ல ஆரம்பித்தார். `நான் நன்றாகத் தான் இருக்கிறேன். துடிப்புடன் இருப்பதற்காக இப்படிச் சாப்பிடுகிறேன்' எனப் பல முறை சொல்லி அம்மாவுக்குப் புரிய வைப்பேன். எல்லாத்தையும் சரி எனக் கேட்டுக்கொண்டு மறுநாள் காலை எழுந்த உடன் மீண்டும் என்னிடம், உடம்பு சரியில்லையா எனக் கேட்பார். அவரை சமாளிக்கவே முடியாது. எல்லா அம்மாக்களுமே அப்படித் தானே. தங்கள் குழந்தைகள் சரியாகச் சாப்பிடவில்லை என்றால் உடல்நிலை சரியில்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள்" என்று தனது தாயின் பாசம் குறித்து நெகிழ்ந்துகொள்கிறார் விராட்.

You'r reading எல்லா அம்மாக்களுமே அப்படித் தான்!.. தன் தாயின் `செல்ல சங்கடத்தை பகிர்ந்த விராட் கோலி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை