மகேந்திரன் என்னும் சினிமா காலக்கண்ணாடி.. எஸ்.பி.சவுத்ரி, காளியை படைத்த சக்தி

Film Director Mahadran Birthday Article

by Chandru, Jul 25, 2020, 14:24 PM IST

டைட்டிலை படித்தவுடன் ஏதோ ஆன்மிக கான்ட்ராவர்ஸி என்று உர்ராக வேண்டாம். இது காளி கதாபாத்திரத்தைப் படைத்த இயக்குனர் மகேந்திரனைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு. ஜூலை 25 என்றதும் மகேந்திரனின் பிறந்தநாள் என்பது அவரது படங்களை ரசிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். 1930ம் ஆண்டு இளையான் குடி என்ற கிராமத்தில் பிறந்தார் அலெக்ஸாண்டர்.ஜே. இவர் தான் பின்னர் மனம் மயக்கும் படங்களை அளிக்கும் மகேந்திரன் ஆனார். சினிமாவே வேண்டாம் என்று பலமுறை ரயில் ஏறி ஊருக்குச் சென்றவரை மீண்டும் மீண்டும் சினிமா பிடித்து இழுத்து வந்தது. எம்ஜிஆரைச் சந்தித்தார். எனக்குக் கதை எழுது என்று அவரிடம் சொன்னார், ஆனால் சிவாஜிக்குத்தான் நிறை குடம். தங்கப்பதக்கம் என அசத்தலான படங்கள் எழுதினார். எம்ஜிஆருக்கும் ஒரு சரித்திர படம் எழுதினார் அதை பிறகு பார்க்கலாம்.

ஹீரோயிஸத்தின் மீது நம்பிக்கை இல்லாத மகேந்திரன் யதார்த்தமான வாழும் கதாபாத்திரங்களை தனது படங்களில் கதாநாயகனாக்கினார். அந்த கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் பிறகு ஹீரோவாக வலம் வந்தார்கள். மகேந்திரன் என்ன 100 படங்களை இயக்கி இருப்பாரா? என்றால் இல்லை, எண்ணி ஒரு டஜன் படங்கள் தான் இயக்கினார். அதுவே அவரை இன்றளவும் பேச வைத்திருக்கிறது. பளபளக்கும் கூழான்கற்கள் ஆயிரம் இருந்தாலும் அங்கு ஒரு வைரக்கல் இருந்தால் அதன் மதிப்பே தனி. அப்படித் தான் ஆயிரக்கணக்கில் படங்கள் வந்து குவிந்தபோதும் மகேந்திரன் படம் என்றால் அதற்கு மதிப்பே தனி. 1966ம் ஆண்டே மகேந்திரன் திரையுலகில் கதாசிரியராக நுழைந்துவிட்டார். நாம் மூவர் படத்துக்கு வசனம் எழுதினார். இதில் ஜெய்சங்கர் எல்.விஜயலட்சுமி ஜோடியாக நடித்தனர், ஜம்பு படத்தை இயக்கினார். அடுத்து சபாஷ் தம்பி, பணக்கார பிள்ளை படங்களுக்குக் கதை எழுதினார். 1969ம் ஆண்டு நிறைகுடம் படத்துக்குக் கதை எழுதினார். சிவாஜி, முத்து ராமன், வாணிஸ்ரீ நடித்திருந்தனர். இப்படத்தை முக்தா சீனிவாசன் இயக்கினார்.

1974ம் ஆண்டு சிவாஜிக்காகத் தங்கப் பதக்கம் படத்தின் கதை, வசனம் எழுதினார் மகேந்திரன். இப்படத்தை பி.மாதவன் டைரக்ட் செய்தார். கதை வசனம் ஸ்கிரிப்ட்டை மாதவனிடம் கொடுத்தார் மகேந்திரன். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர், இவ்வளவுதான் வசனமா? நடிக்கிறது சிவாஜி. 20 பக்கம் வசனத்தை ஒரே மூச்சில் பேசுவார். அவருக்கு இவ்வளவு ஷார்ட்டா வசனம் எழுதினால் ரசிகர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள் என்றார் மாதவன் . ஏற்கனவே நிறைகுடம் படத்தில் மகேந்திரனின் திறமையை அறிந்திருந்த சிவாஜி, மாதவா, போதும்யா. இந்த வசனம். வசனம் சிறிதாக இருந்தாலும் அதில் வெளிப்படும் உணர்ச்சி பாவங்கள் வலுவாக இருக்கிறது மற்றவற்றை அதில் வெளிப்படுத்திக்கொள்ளலாம் என்று மாதவனை சமாதானப்படுத்தினார். அதை மாதவன் ஏற்றுக்கொண்டார்.

எஸ்.பி.சவுத்ரியாக போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றுத் தனது உன்னத நடிப்பால் மகேந்திரனின் வசனத்தைச் சிவாஜி செயல் வடிவத்தில் கொண்டு வந்தார். தியேட்டரில் படம் ரிலீஸ் ஆனபோது பல இடங்களில் வசனத்துக்கும், நடிப்புக்கும் அரங்கில் அப்ளாஸ் கிடைத்தது. ஒரு போலீஸ் அதிகாரி என்றால் தங்கப் பதக்கம் எஸ்.பி.சவுத்ரியைப்போல் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அப்படம் அமைந்தது. இப்படியே கதை வசனம் என்று பயணித்துக்கொண்டிருந்த மகேந்திரன் 1978ம் ஆண்டு காளியைப் படைத்தார். ஆம், அந்த ஆண்டு தான் முள்ளும் மலரும் படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தை படைத்தார் மகேந்திரன். அந்த கதாபாத்திரத்துக்கு யாரை நடிக்க வைப்பது என்று தயாரிப்பாளருடன் இயக்குனர் மகேந்திரன் ஒரு போராட்டத்தையே நடத்தினார்.

வேணு செட்டியார் அப்படத்தைத் தயாரித்தார். காளி பாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்று தயாரிப்பாளர் கேட்க, ரஜினிகாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றார் இயக்குனர். அதைத் தயாரிப்பாளர் ஏற்கவில்லை. வேறு ஹீரோவை நடிக்க வைக்கலாம் என்றார். அதை ஏற்காத மகேந்திரன் அந்த பாத்திரத்தில் ரஜினி நடிக்கவில்லையென்றால் அந்த படத்தையே நான் இயக்கவில்லை என்று பிடிவாதமாகக் கூறினார், அந்த இடத்தில் மகேந்திரன் வென்றார் காளி பிறந்தான். பிறகு அந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுக்க ரஜினி எப்படி உயிர்கொடுத்து நடித்திருந்தார் என்பதெல்லாம் சினிமா சரித்திரத்தில் அழிக்க முடியாத அத்தியாயங்களாக இடம் பிடித்திருக்கின்றன. கே.பாலசந்தருக்காக சிவாஜிராவ் கெய்க் வார்ட் ரஜினிகாந்த்தாக மாறினார். மகேந்திரனுக்காக ரஜினிகாந்த் காளியாக மாறினார்.

1979ம் ஆண்டு உதிரிப்பூக்கள், 1980ல் பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, 81ல் நண்டு, 82ல் மெட்டி, அழகிய கண்ணே, 84ம் ஆண்டு கை கொடுக்கும் கை, 86ல் கண்ணுக்கு மை எழுது, 92ல் ஊர்பஞ்சாயத்து, 2006ம் ஆண்டு சாசனம் ஆகிய படங்களை இயக்கினார் மகேந்திரன்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாக வைத்துப் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் படம் எழுதினார். அந்த படத்தை இயக்கும்படி பாரதிராஜாவிடம் எம்ஜிஆரே கூறினாராம் ஆனால் அப்படம் பல்வேறு காரணங்களால் படமாக்க முடியாமல் நின்றுபோனது. பலரும் பொன்னியின் செல்வனைப் படமாக்க எண்ணி அது நடைபெறாமல் போயிருக்கிறது. தற்போது இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். கொரோனா ஊரடங்கால் அப்படமும் தடைப்பட்டு நிற்கிறது.

இயக்குனர் மகேந்திரன் திறமையான ஒரு நடிகர் என்பதைப் பிற்காலத்தில் நிரூபித்தார். எ.சி.செல்லப்பன் இயக்கிய பொன் மாணிக்கவேல் எ.பாலகிருஷ்ணன் இயக்கிய காமராஜ், ரஜினி நடித்த பேட்ட, விஜய்யின் தெறி, பிரியதர்ஷன் இயக்கிய நிமிர், பாலாஜி தரணிதரன் இயக்கிய சீதக்காதி, திரு இயக்கிய மிஸ்டர் சந்திர மவுலி, சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் ஆகிய படங்களில் தனது கம்பீரமான நடிப்பை வழங்கினார்.கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி தனது 79வது வயதில் மகேந்திரன் மறைந்தார். ஆனாலும் வருங்காலத்தில் சினிமா எப்படிப்பட்ட யதார்த்தங்களை உள்ளடக்கி வரப்போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் தந்த படங்கள் ஒரு காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது.

இயக்குனர் மகேந்திரனின் பிறந்த நாளான இன்று தி சப் எடிட்டர்.காம் சார்பில் அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது புகழ் பாடி வாழ்த்துவோம்.

You'r reading மகேந்திரன் என்னும் சினிமா காலக்கண்ணாடி.. எஸ்.பி.சவுத்ரி, காளியை படைத்த சக்தி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை