கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் முடிந்து திரைக்கு வரக் காத்திருக்கிறது. இதையடுத்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ். அதற்கான பணிகள் வேகமாக நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு எல்லாவற்றையும் தாமதப்படுத்தி இருக்கிறது.ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருக்கிறது. இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி படம் தள்ளிப் போகிறது. இதற்கிடையில் தெலுங்கு படத்தை அவர் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் 45 வருடத் திரையுலக நிறைவையொட்டி அவரது முன்னோட்ட டிபி ஒன்றை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாகக் கமலின் 61 ஆண்டு திரையுலக நிறைவைக் கொண்டாடும் வகையில் வீடியோ வெளியிட்டு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் சத்யா படத்தில் கமல் நடித்த போட்டா படியுது என்ற பாடல் வீடியோ இடம் பெற்றுள்ளது. இதுபற்றி லோகேஷ் கனகராஜ் கூறும் போது,கமல்சாரின் 61 வருட திரையுலக பயணத்துக்கான ரெபல் ஆன்ந்தம் வெளியிடுவது எனக்குக் கிடைத்த கவுரவமாகக் கருதுகிறேன். 1987ம் ஆண்டு வெளியான சத்யா படத்தில் இடம் பெற்ற போட்டா படியுது கிளாசிக் பாடலுடன் இது அருமையான அர்ப்பணிப்பாகும்.
இதனை டைரக்டர் அரவிந்த் ஸ்ரீதர் உருவாக்கினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
61 வருட திரையுலக நிறைவைக் கொண்டாடும் வீடியோவுக்காக நன்றி தெரிவித்திருக்கும் கமல்ஹாசன், அரவிந்த், லோகேஷ் உங்களின் இந்த வீடியோவை கண்டு ரொம்பவே நெகிழ்ந்து விட்டேன். இது அளவு கடந்த அன்பு. இதற்கான எனது பதில் பரிசு இதே அளவுக்கானதாக இருக்கும். எனக்கு தரும் இந்த ஊக்கம் இந்த மாரத்தான் பந்தயத்தில் என்னைத் தொடர்ந்து ஓட வைக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.