பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவாகக் குணமடையத் திரைப்படத் துறையினர் நேற்று ஆன்லைனில் உணர்ச்சி பொங்கிய நிலையில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் .கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட எஸ்பிபி ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்,
அவர் குணம் அடைந்து வரவேண்டும் என்று திரையுலகினரும் ரசிகர்களும் நேற்று கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.வீட்டில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் பாலசுப்ரமணியம் பாடலை சுழலவிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திரைப்பட இயக்குனர்கள் பலர் பாரதி ராஜா தலைமையில் ஆன்லைனில் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. புகழ்பெற்ற இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர் கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பேசினர்.
பாரதிராஜா: நாங்கள் ஒரு பெரிய குடும்பம். நம்மில் ஒருவருக்காக பிரார்த்திக்கிறோம் . நாம் ஒன்றுபட வேண்டும். பாலு மருத்துவமனையில் இருந்து எழுந்து, திரும்பி வந்து மீண்டும் பாட வரவேண்டும். என்று கூறி பிரார்த்தனையை தொடங்கி வைத்தார் பாரதிராஜா.
நடிகர் சத்யராஜ்: நான் ஒரு வில்லனாக நடிக்கத் தொடங்கிய காலம் முதல் ஹீரோ வரை எஸ்பிபி தான் எனக்காகப் பாடினார். அதன் காரணமாகத்தான் மக்கள் என் பாடல்களைப் பார்த்தார்கள்.
பிரபு: எஸ்பிபி ஒரு புகழ்பெற்ற பாடகர் என்றாலும், அவரும் ஒரு நல்ல மனிதர் அத்துடன் மனிதர்களில் ஒரு ரத்தினம் போன்றவர்.
நடிகர் பார்த்திபன்: எஸ்பிபி அனைவரையும் சமமாக நடத்துவார், அதுவே அவரைப் பற்றிய சிறந்த விஷயம்.
இசை அமைப்பாளர் கங்கை அமரன்: சமீபத்தில் ஊரடங்கு காலத்தில் எஸ்பிபி என்னிடம் பேசும்போது பாரதிராஜா வைப் பார்த்து சிறிது காலமாகி விட்டதாகவும் அவர் என்னை அழைக்கவில்லை என்று கூறினார். அவர் தேனிக்குச் சென்று விட்டதாகவும், அவர் திரும்பி வந்து அவரை அழைப்பார் என்றும் நான் அவரிடம் கூறியிருந்தேன்.
டைரக்டர் தங்கர் பச்சன்: மக்கள் ஒரு பெரிய பிரார்த்தனை மூலம் புரட்சித் தலைவரைத் திரும்பப் பெற்றதைப் போலவே, நாமும் எஸ்.பி.பியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
பாரதிராஜா நடத்திய இந்த ஆன்லைன் பிரார்த்தனை கூட்டத்தில் சிவகுமார், அமீர், சரத்குமார், மனோ, கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.எஸ்.ரவிக் குமார், நடிகைகள் சரோஜாதேவி. ராதிகா சரத், பாடகி சித்ரா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் .ஆர்.கே.செல்வமணி தலைமையில் பெப்ஸி தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர்.