கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே படத்தின் வசூல் எவ்வளவு, நடிகர்களின் மார்கெட் நிலவரம் என்ன என்று அறிய முடியும். அதை செய்யாமல் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க சொன்னால் எப்படி முடியும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திரையரங்குகளில் தமிழ் சினிமா எதுவும் வெளிவரவில்லை.
இது குறித்து கூறியுள்ள விஷால், “இப்போது நடந்து கொண்டிருப்பதை ஸ்டிரைக் என்று என்னால் சொல்ல முடியாது. இது தமிழ் சினிமா துறையை புதுபிக்க, திருத்தங்கள் செய்ய, புத்துணர்ச்சியடைய செய்ய நாங்கள் எடுத்துள்ள முடிவு என்று சொல்லலாம்.
ஜிஎஸ்டிக்கு பின் தமிழ் சினிமாவில் இந்த திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதில், முதலாவது கியூப் பிரச்னை, இதை கியூப் பிரச்னை என்று சொல்லுவதே முதலில் தவறு. DSP (Digital Service Provider) பிரச்னை என்று தான் சொல்ல வேண்டும்.
ஹாலிவுட் படங்களுக்கு DSP குறைந்த கட்டணத்தை தான் வாங்குகிறார்கள். ஆனால், நம்முடைய படங்களுக்கு அதிகமாக வாங்குகிறார்கள். கடந்த 12 ஆண்டுகளாக அதிக கட்டணம் செலுத்தி வருகிறோம். திரையரங்க உரிமையாளர்கள் ஒப்பந்த படிவத்தில் இருந்தவற்றை படிக்காமல் கையெழுத்திட்டுள்ளனர்.
என்னுடைய படம் வெளியாகும் போது என்னுடைய நண்பர் நடித்த படத்தின் டிரைலரை போடவேண்டும் என்றால் முடியவில்லை. ஆனால், அவர்கள் ஜவுளி கடை, நகை கடையின் விளம்பரத்தை ஒளிபரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
கியூப் தாண்டி பல பிரச்சனைகள் இருக்கிறது. தியேட்டரில் டிக்கெட் விற்பனை கம்யூட்டர் மூலம் வர வேண்டும். கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே படத்தின் வசூல் எவ்வளவு, நடிகர்களின் மார்கெட் நிலவரம் என்ன என்று அறிய முடியும். அதை செய்யாமல் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க சொன்னால் எப்படி முடியும்.
அரசாங்கத்தின் உதவி இல்லாமல் எங்களுக்கு எதுவும் சாத்தியம் இல்லை. அதிக டிக்கெட் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர் டிக்கெட்டுகளை கணினி மயமாக்கும் வரை திரைப்படத்தை வெளியிட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.