நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை.. சூர்யா மீது நடவடிக்கை கோரிய ஐகோர்ட் நீதிபதி..

Court contempt case against suriya: High Court Judge Letter To CJ

by Chandru, Sep 14, 2020, 10:29 AM IST

நீட் தேர்வுக்கு பயந்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் நடிகர் சூர்யா ஆவேச அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது: நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.

கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள். அனல் பறக்க விவாதிப்பார்கள். நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.

அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்வி முறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும்.
நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்த துணை நிற்பது போலவே. மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டும். அன்பு நிறைந்த குடும்பம், உறவு, நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு, தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்.

மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். ஒரே நாளில் நீட் தேர்வு மூன்று மாணவர்களைக் கொன்று இருக்கிறது. இன்று நடந்தது நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும்.நாம் விழிப்புணர்வுடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கக் கூடாது. சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.. வேதனையுடன்.இவ்வாறு சூரியா கூறியிருந்தார்.

உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக அறிக்கையில் சூர்யா கூறியதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடித்தத்தில், உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கூறியிருப்பது, நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை, இறையாண்மையை அவமதிக்கும் வகையில் உள்ளது .சூர்யாவின் கருத்து நீதிமன்ற மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல்,தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

You'r reading நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை.. சூர்யா மீது நடவடிக்கை கோரிய ஐகோர்ட் நீதிபதி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை