அமேசானின் டிஜிட்டல் சாதனமான அலெக்சாவுக்கு பிரபல நடிகர் அமிதாப்பச்சன் வாய்ஸ் கொடுக்க உள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் அமேசான் அறிமுகப்படுத்திய டிஜிட்டல் வாய்ஸ் பாக்சான அலெக்சா தற்போது உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்து வருகிறது. நீங்கள் விரும்பும் அனைத்து விவரங்களையும் இதன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இன்று மழை பெய்யுமா?, இன்றைய பரபரப்பு செய்திகள் என்ன? உங்களுக்கு தேவையான பாடல்கள் உள்பட அனைத்து விவரங்களையும் இதிலிருந்து பெற முடியும். அது மட்டுமல்ல, நம்முடைய வீட்டில் இருக்கும் மின் சாதனங்களையும் இதை வைத்து இயக்க முடியும்.
இந்நிலையில் அலெக்சாவை மேலும் பிரபலப்படுத்த செலிபிரிட்டிகளின் குரலையும் இதில் சேர்க்க அமேசான் தீர்மானித்துள்ளது. இதன்படி உலகில் முதன்முதலாக ஹாலிவுட் நடிகர் சாமுவேல் பி. ஜாக்சன் தான் அலெக்சாவுக்கு முதல் வாய்ஸ் கொடுத்தார். இதற்கு அடுத்தபடியாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வாய்ஸ் கொடுக்க உள்ளார்.
இதுதொடர்பாக அமேசான் நிறுவனமும், அமிதாப்பச்சனும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியது: வேகமாக வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் புதிய வடிவங்களுடன் சேர்ந்து போக எப்போதும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அமேசானின் அலெக்சாவுடன் ஏற்படுத்தியுள்ள இந்த அதிநவீன பரிசோதனைக்கும் நான் தயாராகி வருகிறேன். இந்த நூதனமான ஒலி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர்கள் உட்பட அனைவருடனும் நெருக்கமாவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறினார்.
அமிதாப்பச்சனின் குரலுடன் கூடிய அலெக்சா 2021ல் வெளியிடப்படும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் வாடிக்கையாளர்கள், ' அலெக்சா சே ஹலோ டு மிஸ்டர் அமிதாப்பச்சன் என்று கூறலாம்.