தற்போதைய சூழ்நிலையில் நமது சமூகத்திற்கு செக்ஸ் கல்வி மிக அவசியம் என்று பிரபல மலையாள நடிகை ஸ்ரிதா சிவதாஸ் கூறியுள்ளார்.கடந்த 2012ல் மலையாளத்தில் வெளியான 'ஆர்டினரி' என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரிதா சிவதாஸ். இதன் பின்னர் இவர், 'மணிபேக் பாலிசி', 'ஹேங்க் ஓவர்', 'கூதரா' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சந்தானத்துடன் 'தில்லுக்கு துட்டு 2' என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் பிரபல நடிகை ரம்யா நம்பீசன் இயக்கிய 'அன் ஹைட்' என்ற மூன்று , நிமிடங்கள் மட்டுமே உள்ள ஒரு குறும்படத்தில் தோன்றியுள்ளார்.இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரிதா சிவதாஸ் கூறியது: ரம்யா நம்பீசனை ஒரு நடிகையாகவும், பாடகியாகவும் அனைவருக்கும் தெரியும். எனது நெருங்கிய தோழியான அவர், என்னை அழைத்து ஒரு குறும்படம் இயக்க இருப்பதாகவும் அதில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கதை கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
தற்போதைய சமூகத்தில் ஒரு ஆணின் மோசமான பார்வையால் பெண் படும் சிரமங்கள் தான் இந்த குறும் படத்தின் ஹைலைட் ஆகும். வெறும் மூன்று நிமிடத்தில் தற்போதைய நம் சமூகத்திற்குத் தேவையான இந்த கருத்தைக் கூறுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் ரம்யா மிகவும் சிறப்பாக அந்த காரியத்தைச் செய்துள்ளார். இந்தப் படம் வெளிவந்த பின்னர் பலர் அழைத்து என்னைப் பாராட்டினர். தற்போதைய சூழ்நிலையில் நம் சமூகத்திற்கு செக்ஸ் கல்வி மிக அவசியமாகும். சினிமா இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.