பாலிவுட்டுக்கு ஆதரவான பேச்சு ஜெயாபச்சன் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

by Nishanth, Sep 16, 2020, 17:52 PM IST

போதைப் பொருள் விவகாரத்தில் பாலிவுட்டுக்கு ஆதரவாக ராஜ்யசபாவில் ஜெயா பச்சனின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுஷாந்தின் தற்கொலைக்குப் போதைப் பொருள் கும்பல் தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் பாலிவுட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜ்யசபாவில் பாஜக எம்பி ரவி கிஷன் பாலிவுட்டை கடுமையாகத் தாக்கிப் பேசினார். பாலிவுட்டைச் சேர்ந்த பல பிரபலங்களுக்குப் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் கூறினார். இதற்குப் பதிலளித்த ஜெயா பச்சன், ஒரு சிலர் செய்யும் தவறுக்காக பாலிவுட்டில் அனைவருமே மோசமானவர்கள் தான் என்று நினைத்துவிட வேண்டாம் என்று கூறி பாலிவுட்டுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

ஜெயா பச்சனின் சில கருத்துக்களுக்கு சமூக இணையதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 'ஷேம் ஆன் ஜெயா பச்சன்' என்ற ஹாஷ் டேக் டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நடிகை கங்கனா ரனாவத்தும் ஜெயா பச்சனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், 'உங்களுடைய மகளுக்கோ, மகனுக்கோ இந்த கதி ஏற்பட்டால் உங்களது நிலை எப்படி இருக்கும்? இப்படித்தான் நீங்கள் பேசுவீர்களா? என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் சமூகத் தளங்களில் ஜெயாபச்சனுக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்ததால் மும்பையில் உள்ள அவரது வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


More Cinema News

அதிகம் படித்தவை