பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் சித்திக் மற்றும் நடிகை பாமா ஆகியோர் இன்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
கடந்த 3 வருடங்களுக்கு முன் கொச்சி அருகே காரில் சென்று கொண்டிருந்த ஒரு பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடிகையின் முன்னாள் டிரைவர் சுனில் குமார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் பிரபல முன்னணி நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர்.
85 நாள் சிறையில் இருந்த பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் திலீப் ஒரு சாட்சியை கலைக்க முயற்சி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து திலீப்பின் ஜாமீனை ரத்து ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக நேற்று நடிகர் திலீப் மற்றும் நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் இன்று நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகர் சித்திக் மற்றும் நடிகை பாமா ஆகியோர் எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நடிகர் திலீப் தனக்கு வந்த பல சினிமா வாய்ப்புகளை தடுத்ததாக பாதிக்கப்பட்ட நடிகை கூறியிருந்தார். இதுகுறித்து நடிகை பாமா மற்றும் நடிகர் சித்திக் இருவரும் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.