நடிகை பலாத்கார வழக்கில் நீதிமன்றத்தில் நடிகர் சித்திக் பல்டி அடித்ததில் ஒரு காரணம் இருக்கலாம். ஆனால் நடிகை பாமா செய்ததை த் தான் பொறுக்க முடியவில்லை என்று நடிகை ரேவதி வேதனை தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் உள்பட ஏராளமானோர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நடிகைக்கும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகர் திலீப்புக்கும் இடையே இருந்து வந்த பிரச்சனைகள் குறித்து இவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.
முதற்கட்ட விசாரணையின் போது பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக வாக்குமூலம் கொடுத்த பலர் பின்னர் பல்டி அடித்து பிறழ் சாட்சிகளாக மாறினர். மலையாள நடிகர் சங்க செயலாளரான இடைவேளை பாபு, நடிகை பிந்து பணிக்கர் உள்பட பலர் நீதிமன்றத்தில் பல்டி அடித்தனர். மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சியை ஒட்டி நடந்த ஒத்திகையின் போது நடிகர் திலீப்புக்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தாங்கள் பார்த்ததாக நடிகை பாமாவும், நடிகர் சித்திக்கும் முதலில் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்களையும் போலீஸ் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இவர்கள் இருவரும் வாக்குமூலம் கொடுப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பாமாவும், சித்திக்கும் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக வாக்கு மூலம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களும் பல்டி அடித்தனர். திலீப்புக்கும், நடிகைக்கும் இடையே நடந்த மோதல் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று நீதிமன்றத்தில் கூறினர். இதையடுத்து இவர்களும் பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நடிகை ரேவதி தன்னுடைய பேஸ்புக்கில் கூறியிருப்பது: சினிமா துறையில் உள்ள சக கலைஞர்களை கூட நம்ப முடியவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஏராளமான சினிமாக்களில் பல வருடங்களாக ஒன்றாக நடித்தும், பணிபுரிந்தும் வந்த கலைஞர்கள் தங்களுடன் உள்ள ஒரு பெண்ணுக்கு பிரச்சினை வந்தபோது அதை எல்லாம் மறந்து விட்டனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் நடிகர் இடைவேளை பாபு, நடிகை பிந்து பணிக்கர் உட்பட சிலர் நீதிமன்றத்தில் பல்டியடித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதற்கு என்ன காரணம் என எனக்கு தெரியும்.
தற்போது நடிகர் சித்திக் தன்னுடைய வாக்குமூலத்தை மாற்றியதிலும் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட நடிகைக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நடிகை பாமா தன்னுடைய வாக்குமூலத்தை மாற்றி கூறியதை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு இது மிகுந்த ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக ஒரு பெண் கடந்த 3 வருடங்களாக போராடி வருகிறார். இதுதொடர்பாக புகார் கொடுத்ததற்காக அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமங்களை யாரும் புரிந்து கொள்ளாதது வேதனை அளிக்கிறது என்று நடிகை ரேவதி குறிப்பிட்டுள்ளார்.