நீட் தேர்வை எதிர்த்த சூர்யா மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு என்ன தெரியுமா? ரசிகர்களிடையே நிலவிய பதற்றத்துக்கு தீர்வு..

Contempt of court against suriya is dismissed in High court

by Chandru, Sep 18, 2020, 19:43 PM IST

நீட் தேர்வுக்கு பயந்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் நடிகர் சூர்யா ஆவேச அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:
நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம்மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.


தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டு பிடிக்கும் சாணக்கியர்கள். அனல் பறக்க விவாதிப்பார்கள். நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.. மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
இவ்வாறு சூர்யா காட்டமாக கூறி இருந்தார்.
சூர்யா தனது அறிக்கையில் நீதிமன்றத்தை விமர்சித்திருந்ததை கண்ட நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என தலைமை நீதிபதி அமர்வு முடிவு செய்துள்ளது. சூர்யாவுக்கு சில அறிவுரைகளையும் நீதிமன்றம் வழங்கி உள்ளது.


பொது விவகாரங்கள் குறித்து பேசும்போது கவனம் தேவை. நீதி மன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவிக்க கூடாது. விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது.
நடிகர் சூர்யா முழுமையாக அறிந்து கொள்ளாமல் விமர்சித்தது தேவையற்றது. கொரோனா காலத்திலும் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்பட்டு 42,233 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்.
இதன் மூலம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் நிலவிய பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை