பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் இறுதி சடங்கு சென்னை செங்குன்றம் தாமரை பாக்கம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று நடந்தது. கொரோனா தொற்று சிகிச்சைக்காக எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவருக்கு கொரோனா தொற்று நீங்கியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறக்கும்போது அவர் உடல்நலிவு காரணமாக இறந்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை.
திரையுலகில் எஸ்பிபி குரல் கொடுக்காத ஹீரோக்களே இல்லை. ரஜினி, கமல் ஹாசன் முதல் பல நடிகர்களுக்கு பிற மொழியில் டப்பிங்கும் பேசி இருக்கிறார். ஆனால் அவர் மரணம் அடைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த சொற்ப அளவிலான நடிகர்கள் மட்டுமே நேரில் வந்தனர். எஸ்பிபி இறப்பதற்கு முதல் நாளே கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார்.
சென்னையில் உள்ள வீட்டில் எஸ்பிபி உடல் பலமணி நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நடிகர்கள் யாரும் வரவில்லை. பின்னர் பண்ணை வீட்டில் இரவு முதல் விடிய விடிய மறுநாள் பகல் 12. 30 மணிவரை உடல் வைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள்தான் நூற்றுக் கணக்கில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர்களில் அர்ஜூன் மயில் சாமி, இயக்குனர் பாரதிராஜா, சில இசை அமைப்பாளர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதற்கு மேல் திரையுலகை சேர்ந்தவர்கள் யாரும் வரமாட்டார்கள் என்று எண்ணிய நிலையில் நடிகர் விஜய் நேரில் வந்து எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் மகன் எஸ்பிபி சரணுக்கு ஆறுதல் கூறினார்.
பலத்த கட்டுப்பாடுகள் பண்னை வீட்டில் விதிக்கப்பட்டிருந்தும் விஜய்யை பார்த்ததும் அங்கிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொள்ளத் தொடங்கினார். அவர்களை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரட்டினார்கள். இதில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ரசிகர்கள் சிதறி ஓடினார்கள். அப்பொது ரசிகர்கள் அணிந்திருந்த செருப்புகள் சிதறின. அதைக்கண்ட விஜய் திடிரென்று கீழே குனிந்து அங்கிருந்த ரசிகர்களின் செருப்பை கையில் எடுத்து கொடுத்தார். இந்த காட்சி வீடியோவில் பதிவாகி நெட்டில் வெளியானது. இது நெகிழ்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.