எங்களைப் போல பெமினிஸ்டுகளுக்கு கணவன்கள் கிடையாது, பங்காளிகள் மட்டுமே உள்ளனர் என்று பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது யூடியூபில் பெண்கள் குறித்தும், பெண்ணியவாதிகள் குறித்தும் பல்வேறு ஆபாச கருத்துக்களைப் பதிவிட்டு இருந்தார். கேரளாவில் உள்ள பெரும்பாலான பெண்ணியவாதிகளுக்கு கணவன்கள் கிடையாது என்றும், அவர்கள் ஒரே சமயத்தில் பல ஆண்களுடன் தொடர்பு வைத்து இருப்பவர்கள் என்றும் இவர் கூறினார். இது குறித்துப் பல பெண்கள் அமைப்பினர் போலீசிலும் மகளிர் ஆணையத்தில் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் பிரபல மலையாள சினிமா பெண் டப்பிங் கலைஞரான பாக்கியலட்சுமி தலைமையில் 3 பெண்கள் விஜய் நாயர் மீது கழிவு ஆயிலை ஊற்றித் தாக்குதல் நடத்தினர். மேலும் அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பை அவர்கள் கைப்பற்றினர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாக்யலட்சுமியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா மற்றும் நடிகர், நடிகைகள் அவருக்கு ஆதரவளித்தனர். ஆனாலும் விஜய் மீது தாக்குதல் நடத்திய பாக்கியலட்சுமி உட்பட 3 பெண்கள் மீதும் போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பது: 'ஆமாம் உண்மைதான், விஜய் நாயர் கூறியது போல என்னைப் போன்ற பெண்ணியவாதிகளுக்கு கணவன்கள் கிடையாது. எங்களுடன் வாழ்க்கையைப் பங்கிடும் பங்காளிகள் மட்டுமே உள்ளனர். எங்களுக்குத் தேவைப்படும்போது நாங்கள் தான் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்'. இவ்வாறு அவர் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.