ஒரு மலையாளப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல நடிகர் ஸ்ரீகுமார் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள சித்ராஞ்சலி ஸ்டூடியோ மூடப்பட்டது.நாடு முழுவதும் கொரோனா லாக்டவுனால் 5 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் தற்போது கடும் நிபந்தனைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. 50 பேருக்கு மேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளக்கூடாது, முகக் கவசம் அணிய வேண்டும் என்பன உள்பட நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் டைவர்ஸ் என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் பிரபல நடிகர் ஸ்ரீகுமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு நடிகர் ஸ்ரீகுமாருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து பரிசோதனை நடத்தியபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த படத்தின் ஸ்டில் போட்டோகிராபர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆகியோருக்கும் கொரோனா பரவியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து உடனடியாக சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஸ்டூடியோ மூடப்பட்டது. நிலைமை சீரான பின் படப்பிடிப்பு தொடங்கும் என்று மலையாள சினிமா வளர்ச்சி கழகத் தலைவர் ஷாஜி என் கருண் தெரிவித்தார். திருவனந்தபுரத்திலுள்ள இந்த ஸ்டுடியோ கேரள அரசின் சினிமா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீ குமார் உட்பட 3 பேரும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.