இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த 5 மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருக்கின்றன. இதனால் ரீலீஸுக்கு காத்திருந்த படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதுடன் படம் ரிலீஸ் பற்றி பெரிய ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் கடந்துபோகிறது. இது ஹீரோக்களுக்கும் உற்சாகத்தைக் குறைத்திருக்கிறது.
தியேட்டர்கள் திறந்துவிடும் என்று காத்திருந்த சூர்யா வேறு வழியில்லாமல் தான் நடித்துள்ள சூரரைப்போற்று படத்தை ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்பனை செய்தார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இனி சூர்யா படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோமென்று எச்சரிக்கை வெளியிட்டனர். அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் சூரரைப்போற்று வெளியாகிறது.
இதையடுத்து படத்தின் டிரெய்லரை வெளியிடும்படி ரசிகர்கள் கேட்ட வண்ணம் இருந்தனர். இதையடுத்து வரும் 15ம் தேதி டிரெய்லர் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிடியில் ரிலீஸ் ஆனாலும் தியேட்டரில் ரிலீஸ் செய்யும் உரிமை தயாரிப்பாளர்களிடமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் மற்றும் மாதவன், அனுஷ்கா நடித்திருக்கும் சைலன்ஸ் ஆகிய படங்கள் இன்று ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது அதே சமயம் அப்படங்கள் வெளிநாடுகளில் தியேட்டரிலும் ரிலீஸ் ஆகி உள்ளது. அதேபோல் சூரரைப்போற்று படமும் ஒடிடியில் ரிலீஸ் செய்யப்படும் அதே நாளில் தியேட்டரிலும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்னும் தியேட்டர்கள் திறக்க அனுமதி தரப்படவில்லை. ஆனால் மத்திய அரசு அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலை ஏற்றுத் தமிழக அரசும் அதனை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளும் என்று அமைச்சர் கூறி இருந்தார். அதன்படி 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டால் சூர்யா படம் தியேட்டரில் அக்டோபர் 30ம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.இந்த தகவல் சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.