விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் பலகட்ட சோதனைகளை கடந்து தீபாவளி அன்று வெளியானது. ரீலிஸுக்கு இரண்டு நாள் முன்பு கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார் விஜய். ஆனாலும், படத்தின் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
படத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி போர்க்கொடி தூக்கி உள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். மேலும், மெர்சல் படத்தில் இருந்து ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால், வழக்குத் தொடரப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழிசையின் இந்த கருத்துக்கு அதே கட்சியைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், “இங்கு ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கிறது. மெர்சல் படத்தில் வரும் கருத்துகளை விஜய் எழுதவில்லை. எனவே, அவரை குறைசொல்லி பயனில்லை. மெர்சல் படம் தணிக்கைக் குழுவின் அனுமதிக்குப் பிறகே திரைக்கு வந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.