திருவனந்தபுரத்தில் யூடியூபில் பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்துக்களை வெளியிட்டவரை தாக்கிய பிரபல மலையாள சினிமா பெண் டப்பிங் கலைஞர் உள்பட 3 பேருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது சேனலில் கடந்த சில மாதங்களாகப் பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பல்வேறு பெண்கள் அமைப்பினர் போலீசுக்கும், கேரள முதல்வருக்கும் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் இவர் தங்கியிருந்த அறைக்குச் சென்ற பிரபல மலையாள சினிமா பெண் டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி உள்பட 3 பெண்கள் அவரை தாக்கி அவர் மேல் கழிவு ஆயிலை ஊற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அவரை மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் லேப்டாப்பை பறித்தனர். இது தொடர்பாக விஜய் நாயர் திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பாக்கியலட்சுமி உள்பட 3 பெண்களுக்கு எதிராக போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் விஜய் நாயரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி உட்பட 3 பெண்களும் முன்ஜாமீன் கோரி திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, பாக்கியலட்சுமி உட்பட 3 பேரின் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பாக்கியலட்சுமி உட்பட 3 பெண்களின் சட்டத்தை மீறிய நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல என்றும், அவர்களது இந்த செயல் நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாதது என்றும் நீதிபதி கூறினார். மூன்று பேருக்கும் முன்ஜாமீன் கொடுத்தால் இது போன்ற தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஊக்கமாக அமைந்துவிடும் என்றும் நீதிபதி கூறினார். இதைத் தொடர்ந்து டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி உட்பட 3 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.