விமான பயணத்தின் போது கொரோனா பரவ வாய்ப்பு உண்டா? ஆய்வில் புதிய தகவல்...!

by Nishanth, Oct 9, 2020, 21:18 PM IST

விமான பயணத்தின் போது கொரோனா பரவ அதிக வாய்ப்புண்டு என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்க மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார்.கடந்த 10 மாதங்களுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் குறையவில்லை. பெரும்பாலான நாடுகளில் நோயின் தீவிரம் தற்போதும் உச்சத்தில் தான் உள்ளது.

உலக அளவில் தற்போது நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 68 ஆயிரத்தைக் கடந்து விட்டது. இந்தியாவில் நோயாளிகள் எண்ணிக்கை 69 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 1 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்தால் கொரோனா பரவ அதிக வாய்ப்புண்டு என்று பரவலாகக் கூறப்பட்டு வந்தது. இதனால் பலரும் விமான பயணத்தைத் தவிர்த்தனர். ஆனால் விமானத்தில் பயணம் செய்வதால் கொரோனா பரவும் என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்க மருத்துவ ஆலோசகர் டாக்டர் டேவிட் பவல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியது: இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 120 கோடி பேர் விமான பயணம் செய்துள்ளனர்.

ஆனால் இதுவரை 44 பேருக்கு மட்டுமே விமான பயணத்தின் மூலம் கொரோனா பரவியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2.7 கோடி பேரில் ஒருவருக்கு மட்டுமே விமான பயணத்தின் போது நோய் பாதித்துள்ளது. ஒருவேளை சில கணக்குகள் பதிவாகாமல் போயிருக்கலாம். ஆனாலும் தற்போதைய கணக்குகள் திருப்தியளிக்கும் வகையில் தான் இருக்கிறது. இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளவைகொரோனா பரவல் தீவிரமாவதற்கு முன்பே தெரிந்தவை ஆகும். அப்போது பயணிகள் முகக் கவசம் எதுவும் அணியத் தொடங்கவில்லை. ஏர்பஸ், போயிங், எம்ப்ராயர் ஆகிய விமானங்களில் நடத்திய பரிசோதனையில் விமான பயணத்தின் போது கொரோனா ஏன் அதிகமாகப் பரவவில்லை என்பதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் காற்று சுழற்சி முறை நோய் பரவலைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது என்று கூறினார். சர்வதேச விமான போக்குவரத்து சங்க இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அலெக்சாண்டர் டி ஜூனியாக் கூறுகையில், தற்போது உலகில் எதுவுமே கொரோனாவிலிருந்து முழு பாதுகாப்பு அளிப்பதில்லை. சரியாக முக கவசம் அணிந்து விமான பயணம் செய்தால் கொரோனா பரவ வாய்ப்புகள் மிகவும் குறைவாகும் எனத் தெரிய வந்துள்ளது. விமானப் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பல சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More India News