பிரபல நடிகை பாவனா குறித்து மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல நடிகை பார்வதி மலையாள சினிமா நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மலையாள சினிமா நடிகர் சங்கம் சார்பில் டுவென்டி 20 படத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக ஒரு படத்தை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டும் வகையில் இந்தப் படம் தயாரிக்கப்பட உள்ளது. முதல் படமான டுவென்டி 20ல் மம்மூட்டி, மோகன்லால் உட்பட அனைத்து நடிகர் நடிகைகளும் நடித்தனர். இந்தப் படத்திலும் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.இந்நிலையில் மலையாள நடிகர் சங்க செயலாளரான இடைவேளை பாபு இன்று ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நடிகர் சங்கம் சார்பில் புதிதாக தயாரிக்க உள்ள படத்தில் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர். ஆனால் நடிகை பாவனாவுக்கு அந்தப் படத்தில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. அவர் நடிகர் சங்கத்தில் தற்போது உறுப்பினராக இல்லை. இறந்த ஒருவர் எப்படி திரும்ப வர முடியும் என்று அவர் கூறினார்.
இடைவேளை பாபுவின் இந்த கருத்துக்கு பிரபல நடிகை பார்வதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதை கண்டித்து அவர் நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது: 2018ல் என்னுடைய சில நண்பர்கள் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகினர். ஆனால் நான் விலகாமல் தொடர்ந்து நீடித்து வந்தேன். அதற்கு காரணம் உண்டு. அழிந்து கொண்டிருக்கும் நடிகர் சங்கத்தை சீரமைக்க சிலராவது வேண்டுமே எனக் கருதியதால் தான் நான் நடிகர் சங்கத்தில் தொடர்ந்தேன்.
ஆனால் நடிகர் சங்க பொதுச் செயலாளர் இடைவேளை பாபுவின் பேட்டியை பார்த்த பின்னரும் நடிகர் சங்கத்தில் ஏதாவது மாற்றம் வரும் என்ற என்னுடைய எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது. நடிகர் சங்கம் கைவிட்ட ஒரு பெண் உறுப்பினரை இறந்து போய் விட்டதாக கூறிய இடைவேளை பாபுவின் வார்த்தைகள் வெறுப்பை ஏற்படுத்தியது. அது வெட்கக் கேடானதாகும். இந்த வார்த்தைகளை அவரால் ஒருபோதும் திருத்த முடியாது. எனவே இனியும் இந்த சங்கத்தில் இருப்பதால் எந்த பலனும் இல்லை. இதனால் எனது நடிகர் சங்க உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு பார்வதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.