ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் சேனல்களுக்கு எதிராக பாலிவுட் போர்க்கொடி.

by Nishanth, Oct 12, 2020, 21:25 PM IST

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து பாலிவுட்டுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவதாக கூறி ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் சேனல்களுக்கு எதிராக பாலிவுட் மொத்தமாக திரண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பின்னர் பாலிவுட் உலகமே போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. சுஷாந்த் சிங் மரணத்திற்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல் தான் காரணம் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது இது குறித்து போலீசும், மத்திய போதை பொருள் தடுப்புத் துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சரா அலி கான் உட்பட பல நடிகைகளிடம் விசாரணை நடைபெற்றது.

பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்பாடு மிக அதிக அளவில் இருப்பதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல செய்தி சேனல்களான ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய சேனல்களில் பாலிவுட் குறித்து அவதூறு பரப்புவதாக பாலிவுட் நடிகர்களான அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சேனல்களுக்கு எதிராக இந்த மூன்று நடிகர்களின் திரைப்பட நிறுவனங்கள் உள்பட 34 தயாரிப்பாளர்கள் மற்றும் 4 சினிமா சங்கங்கள் சேர்ந்து இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்துள்ளன.

சமீபகாலமாக இந்த சேனல்கள் பாலிவுட்டுக்கு எதிராக, 'அழுக்கு', 'குப்பை', 'ஊழல்', 'போதைப் பொருள்' உள்பட மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். போதைப் பொருள் மூலம் ஏற்பட்ட அழுக்கை பாலிவுட் தான் சுத்தப்படுத்த வேண்டும், பாலிவுட்டின் அடிவயிற்றில் உள்ள குப்பைகளால் ஏற்பட்டுள்ள துர்நாற்றத்தை போக்க அரேபியாவில் உள்ள அனைத்து நறுமணப் பொருட்களை கொண்டு வந்தாலும் கூட முடியாது, எல்எஸ்டி, கொக்கைன் போன்ற போதைப் பொருட்கள் பாலிவுட்டை மூழ்கடித்து விட்டன போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். எனவே இந்த சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தங்கள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

Get your business listed on our directory >>More Cinema News