தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பைச் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச் சந்திரன் சமீபத்தில் அறிவித்தார். அவர் கூறியது:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டிற்கான தேர்தலை வருகிற டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த 30.09.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டிற்கான தோ்தல் வருகிற நவம்பர் மாதம் 22ம் தேதி (22.11.2020-ஞாயிற்றுக் கிழமை) அன்று சென்னை அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (சத்யா ஸ்டூடியோஸ்) வளாகத்தில் நடைபெறவுள்ளது.அதற்கான அட்டவணை சங்க உறுப்பினர்களின் கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 12.10.2020 காலை 11 மணி முதல் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் (அலுவலக வேலை நேரத்தில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை) நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தலுக்கான வேட்புமனு கொரியர் மூலம் பெற விரும்பும் தயாரிப்பாளர்கள் தங்களது முகவரியினை எழுத்துப்பூர்வமாக. கடிதம் கொடுத்து உரிய கட்டணத்தினை செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் அளிக்கும் முகவரிக்கு இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தலுக்கான வேட்பு மனு அனுப்பி வைக்கப்படும்.
மேலும், 15.10.2020 காலை 11 மணி முதல் 23.10.2020 மாலை 3.30 மணி வரை வேட்புமனு, தாக்கலுக்கான விண்ணப்பங்கள் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். (ரூ.100 செலுத்தி உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம்). 23.10.2020 மாலை 3.30 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது. 16,10.2020 காலை 11 மணி முதல் 23.10.2020 மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்து விட வேண்டும். (விண்ணப்பப் படிவங்களைத் தபால் அல்லது கொரியரில் அனுப்ப விரும்பும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் 23.10.2020 மாலை 4 மணிக்குள் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
24. 10. 2020 காலை 11 மணி முதல் 29.10.2020 மாலை 4 மணி வரை வேட்புமனு விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல் விண்ணப்பங்களை திரும்பப் பெற இயலாது.29.10.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை அவர் அறிவித்தார்.இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். மன்னன் பிலிம்ஸ் மன்னன் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரது அணியில் இடம்பெறும் மற்ற நபர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இதுபற்றி டி.ராஜேந்தர் கூறியதாவது:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எனக்குத் தாய் வீடு. வரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். என்னுடன் மன்னன் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.மேலும் 7 மாதங்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை 50 சதவீதம் பார்வையாளர்களுடன் அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பல நாட்களுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கு டிக்கட்களுக்கு விதிக்கப்படும் 12% GST வரியை நமது பாரத பிரதமர் ரத்து செய்ய வேண்டும் என்றும் தண்ணீர் இல்லாத தாமரை போல் வாடும் இந்தியத் திரையுலகை வாழ வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும் தமிழக முதல்வருக்கு 8% கேளிக்கை (LBT) வரியை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.
உலகம் முழுவதும் VPF (Virtual Print Fee கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஆனால் நமது இந்திய நாட்டில் மட்டும் இந்த கட்டணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டணம் முழுவதுமாக நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.