லாக்டவுன் சமயத்தில் கடும் மனச்சோர்வு ஏற்பட்டு நான் தற்கொலை செய்யக் கூட தீர்மானித்தேன். ஆனால் நான் அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு என் தம்பி மட்டும் தான் காரணம் என்று கூறுகிறார் பிரபல மலையாள நடிகை சனுஷா.கொரோனா லாக்டவுனால் மன நிம்மதி இழந்தவர்கள் ஏராளம். வேலை பறிபோனதாலும், சம்பளம் அதிரடியாகக் குறைக்கப்பட்டதாலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இதனால் ஏற்பட்ட மனச்சோர்வால் பலர் தற்கொலை முடிவை எடுத்தனர். இதேபோல மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகையான சனுஷா, தான் தற்கொலை செய்யக்கூட முயற்சித்ததாகவும், அதிர்ஷ்டவசமாகக் கடைசி நேரத்தில் அந்த முடிவிலிருந்து பின்வாங்கியதாகவும் கூறியுள்ளார். மனச்சோர்வு ஏற்பட்டது ஏன், தற்கொலை முடிவிலிருந்து பின்வாங்க யார் காரணம் என்பது குறித்து அவர் கூறியதைக் கேட்போம்.
லாக்டவுன் சமயத்தில் நான் மிக மோசமான மனநிலையிலிருந்தேன். மனதளவில் நான் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன். தற்கொலை செய்யக் கூட யோசித்தேன். ஆனால் அதிலிருந்து மீண்டு வர எனக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. என்னைப் போன்ற நிலையைக் கடந்து செல்பவர்களுக்கு நான் கூறும் இந்த தகவல்கள் பயனாக இருக்கட்டும் என்று கருதித் தான் நடந்த சம்பவம் குறித்து நான் வெளிப்படையாகச் சொல்லத் தீர்மானித்தேன்.கொரோனாவின் தொடக்கக் காலம் எனக்கு எல்லா வகையிலும் மிக மோசமான காலகட்டமாக இருந்தது. தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் எனக்குப் பல சிரமங்கள் ஏற்பட்ட நாட்களாக இருந்தது.
என் மனதில் உருவான இருட்டும், அமைதியும் என்னைப் பயமுறுத்தியது. அந்த சமயத்தில் நான் கடுமையான மனச்சோர்வால் பாதிக்கப்பட்டேன். என் மனதில் இருந்த பிரச்சினைகளை யாரிடம் சொல்வது எனத் தெரியவில்லை. யாருடனும் என்னால் நெருங்க முடியவில்லை. எந்த விஷயத்திலும் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இதனால் நான் தற்கொலை முடிவுக்குக் கூட சென்று விட்டேன்.அந்த சமயத்தில் தான் நான் எனது தம்பி சனூப் குறித்து யோசித்தேன். நான் அவனை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். அவனும் என் மேல் உயிரையே வைத்துள்ளான். ஒருவேளை நான் தற்கொலை செய்தால் நிச்சயமாக அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. எனவே தான் நான் தற்கொலை முடிவிலிருந்து பின் வாங்கினேன்.
எப்படியாவது எனக்கு ஏற்பட்ட மனச்சோர்விலிருந்து விடுபடத் தீர்மானித்து நான் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவு செய்தேன். எனக்கு மிக நெருங்கிய தோழியிடம் சென்று அவளிடம் என்னுடைய பிரச்சனைகளைச் சொன்னேன். அவளுடைய யோசனைப்படி ஒரு டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொண்டேன். பின்னர் ஒரு சில நாட்களில் என் மனதிலிருந்து பாரங்கள் அனைத்தும் குறைந்தன. இதன் பிறகுதான் நான் பழைய சனுஷாவாக மாறினேன். வீட்டில் முதலில் என் தம்பியிடம் மட்டும் தான் அனைத்து விவரங்களையும் கூறினேன். அதன்பிறகு தான் எனது பெற்றோரிடம் விவரத்தைக் கூறினேன். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் என்னைக் கடுமையாகத் திட்டினர். நாங்கள் இல்லையா, எங்களிடம் பிரச்சனைகளைச் சொல்லியிருக்கலாமே என்று அறிவுரை கூறினர்.
எனவே என் போன்ற மனநிலையில் இருக்கும் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், என்ன பிரச்சனை வந்தாலும் உடனுக்குடன் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.தேவையான மருத்துவச் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்கிறார் நடிகை சனுஷா. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சனுஷா, திலீப்புடன் மிஸ்டர் மருமகன் என்ற படத்தில் நாயகி ஆனார். தமிழில் காசி, அரண், பீமா உள்படப் படங்களில் சிறு சிறு நடித்துள்ள இவர், ரேணிகுண்டா வில் நாயகியாக நடித்தார். இதுதவிர நாளை நமதே, நந்தி, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.