இனமான வரலாறா?.. இழிதுரோக வரலாறா?... விஜய் சேதுபதி குறித்து ராமதாஸ்!

ramadoss opposes vijay sethupai to act 800 movie

by Sasitharan, Oct 15, 2020, 17:26 PM IST

800 படத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளார். அதில், ``இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன. அறியாமையால் ஒரு துரோக வரலாற்றுக்கு துணை போக விஜய் சேதுபதி முனைவது தவறு; அது திருத்தப்பட வேண்டும். விஜய் சேதுபதி தமிழ்த்திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர். மிகவும் கடினமான காட்சிகளைக் கூட எளிதாக நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர்.

இப்படித் தான் நடிப்பேன் என்று வரையறை வகுத்துக் கொள்ளாமல் நடிப்புக்குத் தீனி போடும் அத்தனை பாத்திரங்களிலும் துணிந்து நடிப்பவர். அப்படிப்பட்டவர் 800 திரைப்படத்தில், முத்தையா முரளிதரன் எனும் கோடாரிக் காம்பின் முழுமையான துரோக வரலாற்றை அறிந்து கொண்டு தான் நடிக்கிறார் என்று நான் நம்பவில்லை; அறியாமை காரணமாகவே இப்படி ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். ஒருவேளை முத்தையா முரளிதரனின் துரோகங்களையெல்லாம் நன்றாக அறிந்த பிறகே அவர் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்றால் அவர் முரளிதரனை விட மோசமான துரோகியாக பார்க்கப்படுவார்.

முத்தையா முரளிதரனின் பூர்வீகம் தமிழ்நாடு தான். அவர் தமிழர் தான். ஆனால், அவர் தமிழ் குலத்திற்கே துரோகியானவர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை சிங்களர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தவர். இலங்கையில் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை ஒட்டுமொத்த உலகமும் கண்டித்த போது, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்று ஏகடியம் பேசியவர். 2009ஆம் ஆண்டு இலங்கைப் போரில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட போது, தமிழர்களுக்கான விடுதலைப்போரில் பின்னடைவு ஏற்பட்டு விட்டதே, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்களை இழந்து விட்டோமே? என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கதறிக் கொண்டிருந்த போது, இலங்கையில் இனிமேல் தான் தமிழர்கள் அச்சமின்றி நடமாட முடியும் என்று நாக்கில் நஞ்சு தடவி பேசிய விஷம் தான் முரளிதரன். இலங்கையில் சிங்களர்களின் அட்டகாசத்தால் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் உயிருக்கு அஞ்சி தாய்மண்ணை விட்டு வெளியேறி உலகின் பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் என்ற உண்மை வரலாற்றை மக்கள் பேசிய போது, ஈழத்தமிழர்கள் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தான் வெளிநாடுகளுக்கு சென்றனர் என்று நக்கலடித்து மகிழ்ந்தவர் தான் முரளிதரன்.

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இராஜபக்சே குடும்பத்தின் புகழ்ந்து பேசுவது தான் அவரின் முழு நேரத் தொழில் ஆகும். இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் ஆளுனராக முத்தையா முரளிதரனை நியமிக்கலாமா? என்று இராஜபக்சே சகோதரர்கள் பரிசீலிக்கும் அளவுக்கு அவர்களின் விசுவாசியாக இருந்தவர் முரளிதரன். ஈழத்தமிழர்களுக்கு முரளிதரன் செய்த துரோகங்களுக்கு இந்த உதாரணங்களே போதுமானவை. உலகில் உள்ள விளையாட்டு வீரர்களில் பெரும்பான்மையானவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றவர்கள்; பன்னாட்டு போட்டிகளில் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியவர்கள்.

ஆனால், முரளிதரன் இனப்படுகொலை செய்தவர்களுக்கும், போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு துணை நிற்பவர். இந்த உண்மைகள் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் இருக்கலாம்; அதனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கலாம் என்று கருதுகிறேன். முத்தையா முரளிதரனின் விளையாட்டுச் சாதனையை சித்தரிக்கும் படத்தில் மட்டும் தான் நடிக்கிறேன் என்று விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்படலாம். உண்மையில் 800 திரைப்படம் முரளியின் சாதனைகளைப் பற்றி மட்டும் பேசும் படமாக இருக்காது; அவர் மூலமாக இராஜபக்சே சகோதரர்களை உத்தமர்களாக சித்தரிக்கும் காட்சிகள் படம் முழுவதும் நிறைந்திருக்கும் என்பது தான் எங்களின் ஐயம். விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. நான் திரைப்படங்களை அதிக அளவில் பார்ப்பவன் அல்ல.

எனினும், நடிகர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை என்ற திரைப்படத்தை அப்படக்குழு அழைப்பை ஏற்று பார்த்தேன். அந்தப் படத்தில் விஜய் சேதுபதியை மக்கள் மருத்துவராகவே பார்த்தேன்; கிராமப்புற ஏழைகளுக்கு அவர் வாஞ்சையுடன் மருத்துவம் அளிக்கும் காட்சிகளில் நான் அவருக்குள் என்னைப் பார்த்தேன். ஆனால், முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அவரை மட்டைப்பந்து வீரராக எவரும் பார்க்க மாட்டார்கள்; மாறாக துரோகத்தின் சின்னமாகவே பார்ப்பார்கள். 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் வலியுறுத்தப்போவதில்லை. அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவார்; மாறாக, தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார்" எனக் கூறியுள்ளார்.

You'r reading இனமான வரலாறா?.. இழிதுரோக வரலாறா?... விஜய் சேதுபதி குறித்து ராமதாஸ்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை