பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு வழங்கிய தளர்வுகள் இன்று முதல் அமல்.கொரோனா ஊரடங்கில் பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க, மத்திய அரசு வழங்கிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.இதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு கடந்த, 1ம் தேதி அறிவித்தது.
அதன்படி இன்று முதல், தனிக் கட்டடங்களில் இயங்கும் திரையரங்குகள், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள், 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யவும், கூட்டத்தைக் குறைக்கக் கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்சல் செய்யப்பட்ட உணவுகளை மட்டும் விற்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பூங்காக்களை திறப்பதற்கு முன்னும், மூடிய பின்னும், அனைத்து பகுதிகளையும், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இன்று முதல், பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், இது பற்றி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் இன்று முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதால், கிருமி நாசினி தெளிப்பு உட்படப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
ஐம்பது சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும், ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமரச் செய்ய வேண்டும், மாஸ்க் அணிந்த படியே படம் பார்க்க அனுமதிக்க வேண்டும், டிக்கெட் முன்பதிவு செய்வோரின் விவரங்களைக் கட்டாயம் சேகரிக்க வேண்டும், டிக்கெட் கவுன்ட்டர்கள் நாள் முழுவதும் திறந்திருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களின்படி செயல்படத் திரையரங்குகள் தயாராகி உள்ளன.