மலையாள நடிகர் சங்கத்தில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை பகிரங்க குற்றச்சாட்டு...!

Revathy and Padmapriya write open letter to malayalam actors association

by Nishanth, Oct 15, 2020, 18:28 PM IST

மலையாள நடிகர் சங்கத்தில் 50 சதவீதம் உறுப்பினர்களாக இருப்பது நடிகைகள் தான். ஆனால் இந்த சங்கத்தில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று நடிகைகள் ரேவதி மற்றும் பத்மபிரியா ஆகியோர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மலையாள நடிகர் சங்கத்திற்கு அவர்கள் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளனர்.
'அம்மா' என்ற பெயரில் மலையாள நடிகர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.

தற்போது நடிகர் சங்கத்தின் தலைவராகப் பிரபல நடிகர் மோகன்லாலும், பொதுச் செயலாளராக நடிகர் இடைவேளை பாபுவும் உள்ளனர். மலையாள நடிகர் சங்கத்தில் கடந்த பல வருடங்களாகவே பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. மோகன்லாலுக்கு முன்பு பிரபல நடிகர் இன்னசென்ட் தலைவராக இருந்தார். அவர் 15 வருடங்களுக்கும் மேல் இந்த பொறுப்பை வகித்து வந்தார். நடிகர் சங்கத்திற்கு எதிராக யாராவது செயல்பட்டால் அவர்களுக்குத் தடை விதிப்பது வழக்கமாகும். இதே போலத்தான் பழம்பெரும் நடிகர் திலகனுக்குப் பல வருடங்கள் நடிகர் சங்கம் தடை விதித்தது.

இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் நடிகர் சங்கத்துடன் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாகப் பிரபல நடிகை பாவனா தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு ஆதரவு தெரிவித்து ரம்யா நம்பீசன் உள்பட சில நடிகைகளும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன் டுவென்டி 20 என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்பட்டது. மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, ஜெயராம் உட்பட முன்னணி நடிகர்களும், பாவனா, கோபிகா, நயன்தாரா உள்பட முன்னணி நடிகைகளும் நடித்தனர்.

இந்த படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்நிலையில் நடிகர் சங்க பொதுச் செயலாளரான இடைவேளை பாபு ஒரு மலையாள டிவிக்கு அளித்த பேட்டியில், நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காகத் தயாரிக்கப்பட உள்ள படத்தில் நடிகை பாவனாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இறந்தவருக்கு எப்படி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியும் என்று கூறினார். இடைவேளை பாபுவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைக் கண்டித்து முன்னணி நடிகையான பார்வதி கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் நடிகைகள் ரேவதியும் பத்மபிரியாவும் மலையாள நடிகர் சங்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பது: நடிகர் சங்க உறுப்பினர் என்ற நிலையில் எங்களுடைய சக கலைஞரான பார்வதி செய்துள்ள ராஜினாமா, பாதிக்கப்பட்ட ஒரு நடிகைக்கு ஆதரவாக 2018ல் நாங்கள் தொடங்கிய போராட்டத்தின் அதே காலகட்டத்தை நோக்கிச் செல்ல வைத்துவிட்டது. மிகுந்த வேதனையுடன் தான் நாங்கள் அந்த போராட்டத்தைத் தொடங்கினோம். மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து நாங்கள் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை.

நடிகர் சங்கத்தில் நடிகைகளுக்கு இணையாக நடிகைகளும் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. நடிகை பாவனா குறித்து நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் இடைவேளை பாபு கூறிய கருத்தில் இருந்தே இதை அனைவரும் புரிந்து கொள்ளலாம். நடிகர் சங்கத்தின் தலைமைக்கு போதிய திறமை இல்லாதது தான் இந்த சங்கத்தின் மோசமான நிலைக்குக் காரணமாகும். எனவே இனியாவது நடிகைகளுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க நடிகர் சங்கத்தின் தலைமை முன்வர வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை