பல்வேறு பிரபலங்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்திருக்கின்றனர். சிலர் மரணத்தைத் தழுவி உள்ளனர். பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர். இர்பான் கான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் நடிகை மனிஷா கொய்ராலாவும் பாதிக்கப்பட்டார். இவர்கள் அனைவருமே அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார். நடிகை மனிஷா கொய்ராலா குணம் அடைந்து தனது பணிகளைக் கவனித்து வருகிறார். ரிஷிகபூர், இர்பான்கான் சிகிச்சை முடிந்து சுமார் ஒரு வருடம் பணியாற்றினர். ஆனாலும் திடீர் பாதிப்பு காரணமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் அடுத்தடுத்து அவர்கள் மரணம் அடைந்தனர். இது திரையுலகைச் சோகத்தில் ஆழ்த்தியது.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடந்த 4 மாதங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. டெஸ்ட்டில் அவருக்கு கொரோனா உறுதியாகவில்லை. மூச்சுத் திணறலுக்குச் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பினார். அடுத்த 2 நாளில் மற்றொரு சோதனை முடிவு வந்தது அது அவரை மட்டுமல்ல அவரது ரசிகர்கள், குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நுரையீரலில் அவருக்கு முற்றிய நிலையில் கேன்சர் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கேன்சர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். முன்னதாக உடல்நிலை கருதி சில காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக தெரிவித்தார்.
கேன்சர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சஞ்சய் தத் புகைப்படம் ஒன்று நெட்டில் சில வாரங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தார். ஆனால் அவர் யாரிடமும் பரிதாபம் எதிர்பார்க்காமல் வேலை மீது கவனத்தைத் திருப்பி இருக்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. தற்போது அவர் தனது சமூகவலை தள பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு கே ஜி எப் 2, அதீரா படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க ஆயத்தமாகி விட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார். அதன்படி அவர் படப்பிடிப்பில் பங்கேற்றார்.தனக்கு ஏற்பட்ட நோய் பற்றி கவலைப்படாமல் வேலை மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.