தன்னுடைய 14வது வயதில் ஒரு படத்தில் நடித்த பலாத்கார காட்சிகள் ஆபாச இணையதளங்களில் வெளியிடப்பட்டதால் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக அந்த படத்தில் நடித்த சோனா ஆபிரகாம் கூறியுள்ளார். 'ஃபார் சேல்' என்ற அந்தப் படத்தில், தான் காதல் சந்தியாவின் தங்கையாக நடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சோனா ஆபிரகாம். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் 'ஃபார் சேல்' என்ற மலையாள படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் காதல் சந்தியா ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். சந்தியாவுக்கு தங்கையாக சோனா ஆபிரகாம் நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஒரு பலாத்கார காட்சியில் சோனா ஆபிரகாம் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு பின்னர் அந்த காட்சிகள் ஆபாச இணையதளங்களில் வெளியானது. அதன் பிறகு தன்னுடைய வாழ்க்கையில் பல வேதனையான சம்பவங்கள் நடந்ததாக சோனா ஆபிரகாம் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பது: நான் என்னுடைய 14வது வயதில் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தில் ஃபார் சேல் என்ற மலையாள படத்தில் நடித்தேன்.
அந்தப் படத்தில் பிரபல நடிகைகளான காதல் சந்தியா, ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். காதல் சந்தியாவின் தங்கையாக நான் நடித்திருந்தேன். அந்த படத்தின் மூலம் சமூகத்திற்கு என்ன கருத்தை டைரக்டர் சொல்ல வந்தார் என எனக்கு தெரியவில்லை. முழுக்க முழுக்க பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் தான் அந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தன. அறியாத பருவத்தில் தான் அந்தப் படத்தில் நான் நடித்தேன். படத்தின் கதையின்படி தங்கை பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்த அக்கா தற்கொலை செய்து கொள்வார். ஆனால் பின்னர் நான் உண்மையிலேயே தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டேன்.
கதையின்படி பலாத்கார காட்சியை எடுக்க வேண்டும் என்று டைரக்டர் என்னிடம் கூறினார். ஆனால் 100க்கும் மேற்பட்டோரின் முன்னிலையில் அந்த காட்சியில் நடிக்க முடியாது என நான் தெரிவித்தேன். இதையடுத்து கொச்சியில் உள்ள டைரக்டரின் அலுவலத்தில் வைத்து அந்த பலாத்கார காட்சிகள் எடுக்கப்பட்டன. அப்போது எனது பெற்றோரும் இருந்தனர். படப்பிடிப்பு முடிந்த பின்னர் நான் படிப்பதற்காக சென்றுவிட்டேன். பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் போது சில யூடியூப்களில் அந்த படத்தின் பலாத்கார காட்சிகள் வெளியானது எனக்கு தெரியவந்தது. இதை அறிந்த எனது குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர்.
எனது உறவினர்களும் என்னை சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர். பலர் நேரடியாகவே என்னை திட்டினர். அந்தப் படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் மற்றும் எடிட்டர் ஆகியோரிடம் மட்டுமே இருந்த அந்த காட்சிகள் எப்படி யூடியூபில் வெளியானது என எனக்கு தெரியவில்லை. இது குறித்து நான் கேரள முதல்வர், டிஜிபி உள்பட பலரிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த பல வருடங்களாக நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையில் இருக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.