ஜேம்ஸ் பாண்டின் விரைவில் வெளிவர உள்ள 'நோ டைம் டு டை'யும் ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து இதுவரை உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1962ல் தான் முதல் ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியானது. 'டாக்டர் நோ' என்ற இந்தப் படத்தில் சீன் கானரி முதல் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார். இவர் மட்டுமே 1983 வரை 7 படங்களில் பாண்டாக நடித்துள்ளார். இதன் பின்னர் டேவிட் நிவன், ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் தற்போது கடைசியாக டேனியல் கிரெய்க் ஆகியோர் ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடித்துள்ளனர். பாண்ட் வரிசையில் 25வது படமாக 'நோ டைம் டு டை' தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் டோனி கிரெய்க் தான் பான்ட் ஆக வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பு செலவு 250 மில்லியன் டாலர்களாகும்.
இந்த ஆண்டு இந்தப் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனதால் ரிலீசும் தாமதமாகி வருகிறது. கடைசியில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவல்களின் படி 'நோ டைம் டு டை' ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக எம்ஜிஎம், ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடி தள நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
கொரோனா பரவல் கரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக ஹாலிவுட் படங்கள் எதுவும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. 30க்கு மேற்பட்ட ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அவதார் 2, பேட் மேன், பிளாக் விடோ ஆகியவை இதில் குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.