ஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா? படம் வாங்கலயோ படம்..

James Bonds No Time To Die To Get A Digital Release?

by Chandru, Oct 26, 2020, 10:30 AM IST

அந்தக் காலத்தில் வெளியான திருவிளையாடல் படத்தில் நடிகர் சிவாஜி விறகு வியாபாரியாக நடிப்பார். தலையில் விறகு சுமந்து தெருத் தெருவாக நடந்து விறகு வாங்கலையோ விறகு, ஒரு விறகு அடுப்புல வெச்சா ஜவ்வாது வாசனை, இன்னொரு விறகு அடுப்புல வச்சா சாம்பிராணி வாசனை என்பார். சினிமாக்கார்களின் நிலைமையும் அந்த கதி ஆகிவிட்டது.

சூப்பர் ஸ்டார் படம் , தளபதி படம், தல படம் என எல்லாம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் செய்யவும் முடியாமல், ஒடிடி தளத்துக்கு விற்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆறின கஞ்சி பழங்கஞ்சி போல் படங்கள் ரிலீஸ் ஆவது தாமதம் ஆக அதற்கான மவுசும் குறைந்துக்கொண்டே போகிறது.

இது ஹீரோக்களை திகிலில் ஆழ்த்தி உள்ளது. இப்போதே பல பிரபலங்கள் பாதுகாப்பாக ஒடிடி தள வெப் சீரிஸ்களில் நடிக்கச் சென்று விட்டனர். சத்யராஜ், ஜெய், தமன்னா, காஜல் அகர்வால். சமந்தா, நித்யா மேனன், ராதிகா ஆப்தே இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஒடிடி தளங்கள் சினிமாவையே சுருட்டி ஏப்பம்விட்டு விடும்மோ என்ற பயம் சூழ்ந்திருக்கிறது. தியேட்டர்கள் எல்லாம் கல்யாண மண்டபம் அல்லது குடோனாக மாறிவிடுமோ என்ற கேள்வி எழுத்துள்ளது.

தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற எண்ணத்தில் காத்திருந்த சூர்யா அது இப்போதைக்கு நடக்காது என உணர்ந்து தான் நடித்த சூரரைப்போற்று படத்தை ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்றுவிட்டார். மாஸ்டர் படத்தையும், அண்ணாத்த, வலிமை படத்தையும் கூட வளைத்துப்போட ஒடிடி தளங்கள் வலைவீசிக் கொண்டிருக்கின்றன. அந்த வலையில் சிக்காமல் அவைகள் நழுவிக் கொண்டிருக்கின்றனர்.

பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு குறி வைக்கும் ஒடிடி தளங்களில் மேலும் பல ஹீரோக்களின் படங்களை விற்க இதில் இந்த சிறப்பு இருக்கு, அந்த ஸ்பெஷல் இருக்கு என்று திருவிளையாடல் சிவாஜி போல் ஒடிடி தளங்களிடம் விற்கக் கூவிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமை தற்போது ஜேம்ஸ் பாண்ட் 007 படத்துக்கும் வந்திருக்கிறது. டேனியல் கிரெய்க் நடித்திருக்கும் ஜேம்ஸ் பாண்ட் படம் நோ டைம் டு டை. இப்படம் முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் தியேட்டர்கள் மூடிக்கிடக்கிறது. அப்படியே திறந்தாலும் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என கண்டிஷன்கள் உள்ளது. இந்த நேரத்தில் படத்தை வெளியிட ஜேம்ஸ் பாண்ட் பட நிறுவனம் தயக்கம் காட்டுகிறது. கடந்த ஏப்ரல் மாதமே வந்திருக்க வேண்டிய நோ டைம் டு டை கொரோனா ஊரடங்கால் நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

தற்போதும் நிலைமை சீரடையாத நிலையில் ஒடிடியில் தங்கள் கேட்கும் கோடிகளைக் கொடுத்தால் படத்தை விற்கத் தயாராக ஜேம்ஸ் பாண்ட் நிறுவனம் இருக்கிறார்களாம். சரி அப்படி என்ன கேட்கப்போகிறார்கள் 500 கோடி கேட்பார்களா என்று கணக்குப் போட்டுவிடாதீர்கள். அவர்கள் கேட்பது 600 மில்லயன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ 4400 கோடி. இந்த விலை கொடுத்தும் படத்தை வாங்க நெட்பிளிக்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தயாராக இருக்கிறதாம். முழுமையாக தியேட்டர்கள் திறக்கப்படாத பட்சத்தில் ஜேம்ஸ் பாண்டும் ஒடிடி தளத்திற்குள் நுழைந்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை