பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கேரளாவை சேர்ந்த சிபிஎம் மாநில செயலாளரின் மகனும், நடிகருமான பினீஷ் கொடியேறி சிக்கியதை தொடர்ந்து மலையாள திரையுலகத்தில் விசாரணையை தீவிரப்படுத்த மத்திய அமலாக்கத் துறையும், மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறையும் தீர்மானித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் பெங்களூருவில் மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் போதைப் பொருளுடன் கன்னட டிவி நடிகை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கேரளாவை சேர்ந்த முகம்மது அனூப் மற்றும் ரவீந்திரன் ஆகியோரும் உண்டு. இதில் முகம்மது அனூப்புக்கு கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகனும், மலையாள சினிமா நடிகருமான பினீஷ் கொடியேறிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று மத்திய அமலாக்கத் துறையினர் பினீஷ் கொடியேறியை பெங்களூருவுக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவருக்கு எதிராக பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து பினீஷை கைது செய்தனர். தற்போது இவர் மத்திய அமலாக்கத் துறையின் 4 நாள் காவலில் உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட முகம்மது அனூப்புக்கு மலையாள திரையுலகை சேர்ந்த சிலருடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மலையாள திரையுலகில் உள்ள சிலருக்கு போதைப் பொருளை விற்பனை செய்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் பாலிவுட், சேன்டல்வுட்டுக்கு அடுத்தபடியாக மல்லுவுட்டுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மத்திய அமலாக்கத் துறையும், மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறையும் விரைவில் கேரளாவில் சில முக்கிய சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பினீஷ் கொடியேறியுடன் யார், யாருக்கு நெருக்கம் இருந்தது என்பது குறித்து ரகசிய விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என கருதப்படுகிறது.