கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் ராகவாலாரன்ஸ் தமிழில் தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடித்த படம் 'காஞ்சனா'. தற்போது 'லக்ஷ்மி பாம்' என்கிற பெயரில் இந்தியில் தயாராகி உள்ளது. சமீபத்தில் இப்படத்துக்கு லக்ஷ்மி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழில் லாரன்ஸ் ஏற்ற பாத்திரத்தை இந்தியில் அக்ஷய் குமார் ஏற்றிருக்கிறார். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் தற்போது இப்படம் நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
இப்படத்திற்காக புடவை அணிந்து நடித்த அனுபவம் குறித்து அக்ஷய்குமார் கூறும்போது, "இப்படத்துக்காகப் புடவை உடுத்தியது நல்ல அனுபவம். புடவை ஒரு நல்ல உடை. எல்லா அளவில் இருப்பவர்களுக்கும் சரியாக இருக்கும். புடவை அணிந்து ஓடும் பேருந்து,ட்ரெய்னில் ஏறும் பெண்களை, தினசரி வேலை செய்யும் பெண்களைப் பார்க்கிறோம். என்னால் புடவையில் நடக்கக் கூட முடியவில்லை. இதை உடுத்திச் சமாளிக்கும் பெண்களுக்கு வாழ்த்துகள். இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் புடவை உடுத்திப் பார்த்தால் தான் தெரியும்" என்று அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது லக்ஷ்மி படத்திற்காக அக்ஷய்குமார் ஆடியிருக்கும் திருநங்கை வேடத்தில் புடவை கட்டி நெற்றியில் பெரிய பொட்டு வைத்தபடி பாடல் ஒன்றுக்கு ஆடியிருக்கும் ஆக்ரோஷமான ஆட்டம் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார்.