ஹீரோக்கள் கமல், விக்ரம், சூர்யா போன்ற ஒரு சில நடிகர்கள் தங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையைக் குறைத்தோ அல்லது கூட்டியோ நடிக்கின்றனர். சமீபத்தில் நடிகர் சிம்பு தனது உடல் எடையை எல்லோரும் வியக்கும் அளவுக்கு ஒல்லியான தோற்றத்துக்கு குறைத்திருந்தார். சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்துக்கு அவர் இதுபோல் தனது தோற்றத்தைக் குறைத்தார். இதற்காகத் தினமும் சாப்பிடும் 5 பிரியாணியைத் தியாகம் செய்தார். இவர்களைவிடவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் நடிகர் நகுல்.
ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமான குண்டாக காமெடியன் போல் தோற்றம் அளித்தார் நகுல். அப்படத்துக்குப் பிறகு 5 வருடம் காணாமல் போனார். திடீரென்று காதலில் விழுந்தேன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வந்தார். பாயஸ் படத்தில் நடித்த நகுலா இது என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு அவர் மெலிந்து ஹீரோ தோற்றத்துக்கு மாறி இருந்தார். அவரது தோற்றத்தைப் பார்த்தபோது இதற்காக எவ்வளவு மெனக்கெட்டிருப்பார் என்பதை உணரமுடிந்தது. அந்த தோற்றத்தை அப்படியே இன்று வரை தக்க வைத்து வருகிறார். இப்படித்தான் இன்னொரு நடிகர் ஒல்லியான தோற்றத்துக்கு மாற 16 கிலோ எடை குறைத்திருக்கிறார்.
கபாலி, பரியேறும் பெருமாள் கஜினிகாந்த் ,குண்டு படங்களில் நடித்தவர் லிங்கேஷ். வில்லனாகப் பல படங்களில் நடித்தவர் முதன் முறையாகக் கதாநாயகனாக அறிமுகமாகிறார்மெட்ராஸ், கபாலி, ஜடா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும்போதே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது தோற்றத்தை மாற்ற உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் செய்து அந்த கதாபாத்திரத்திற்காக ஈடுபாட்டுடன் நடித்திருப்பார். அறிமுக இயக்குனர் ஜெய்அமர்சிங் இயக்கும் படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் நடிகர் லிங்கேஷ். கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் கல்லூரி மாணவர்களின் கதை என்பதால் உடல் எடையைக் குறைத்து கல்லூரி மாணவர் போல இருக்கவேண்டுமென்று இயக்குனர் கேட்டுக் கொண்டார். அதற்காக 60 நாட்கள் டைம் கேட்டார். எண்ணி இரண்டே மாதங்களில் பதினாறு கிலோ எடையைக் குறைத்திருக்கிறார்.
கலர்புல்லான அதே சமயம் சமூக கருத்தையும் பேசுகிற கல்லூரி மாணவர்களின் வாழ்வில் நடக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாகவும் , மாணவர்களின் இயல்பான வாழ்வில் நடக்கும் காதல் கொண்டாட்டம் சோகம் அனைத்தையும் பேசுகிற படமாகவும் இருக்கும்.சமீபத்தில் இந்தப்படத்திற்கான போட்டோசூட் நடைபெற்றிருக்கிறது. இந்தப்படத்திற்குப் பிறகு லிங்கேஷ், இயக்குனர் ப்ராங்ளின் இயக்கும் படத்திலும், இதே நிறுவனத்தின் அடுத்தபடத்திலும் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.தனி இசைக்கலைஞராக அறியப்பட்ட ஆப்ரோ இந்தப் படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராகிறார். இந்தியில் டோட்டல் தமால் படத்தின் ஜப்பானிய ஒளிப்பதிவாளர் கெய்க்கோ மற்றும் கோபி அமர்நாத்திடம் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கார்த்திக் சுப்பிரமணியம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். அஷோக் எடிட்டிங் செய்கிறார்.
கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஜெய்அமர்சிங் இவர் லண்டன் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் என்றென்றும் புன்னகை படத்தின் இயக்குனர் அஹமத்தின் துணை இயக்குனராக இருந்தவர் தீபாவளிக்குப்பிறகு படப் பிடிப்பு துவங்க இருக்கிறது. பிரவீன் மற்றும் சரத் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.