பிரபல நடிகரின் மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் நடிகர் எச்சரிக்கை

by Nishanth, Nov 10, 2020, 16:03 PM IST

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜின் மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு பிரித்விராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்விராஜ். சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் இவர், 10க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

மேலும் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற பிரமாண்டமான படத்தை இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார். இவரது மனைவி சுப்ரியா. இவர்களுக்கு 6 வயதில் அலங்க்ருதா என்ற மகள் உண்டு. பெரும்பாலும் தன்னுடைய மகளின் புகைப்படங்களை பிரித்விராஜ் சமூக இணைய தளங்களில் வெளியிடுவதில்லை. ரசிகர்கள் பிரித்விராஜின் மகளுடைய போட்டோவை வெளியிட வேண்டுமென்று கூறினாலும் எப்போதாவது தான் மகளுடைய புகைப்படத்தை அவர் சமூக இணைய தளங்களில் பகிர்வார்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் சமீபத்தில் அவருடைய மகளின் 6வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டார். இதற்கு சமூக இணையதளங்களில் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரித்விராஜின் மகளின் பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு இருப்பது தெரியவந்தது. பிரித்விராஜ் தனது மகளை அல்லி என்று தான் செல்லமாக அழைப்பார். அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் அல்லி பிரித்திவிராஜ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களும் அதை உண்மை எனக் கருதினர். அந்த கணக்கை பிரித்விராஜும், அவரது மனைவி சுப்ரியாவும் சேர்ந்து பராமரித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து அறிந்த பிரித்விராஜ், அது தன்னுடைய மகளின் இன்ஸ்டாகிராம் கணக்கு அல்ல என்றும், அது போலியானது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராமில் கூறியது: என்னுடைய மகளுக்கு 6 வயது தான் ஆகிறது. இந்த வயதில் அவளுக்கு சமூக இணையதளத்தில் எந்த தேவையும் இல்லை. அவள் பெரியவள் ஆகும்போது அது குறித்து சொந்தமாக முடிவெடுக்க அவளுக்கு உரிமை உண்டு. இதை நம்பி ரசிகர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை