நடிப்பு என் ரத்தத்தில் ஊறியது மீண்டும் வருவேன் நடிகை மேக்னா ராஜ் உருக்கம்

by Nishanth, Nov 13, 2020, 20:33 PM IST

நடிப்பு என்னுடைய ரத்தத்தில் ஊறியது, எனக்கு பிடித்தமான எதையும் கைவிட வேண்டும் என்று என்னுடைய கணவர் சீரு விரும்ப மாட்டார். எனவே நான் மீண்டும் நடிக்க வருவேன் என்று கூறுகிறார் நடிகை மேக்னா ராஜ். கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னா ராஜும் கடந்த 2018ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி சிரஞ்சீவி சர்ஜா என்ற சீரு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது திடீர் மறைவு கன்னட திரையுலகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி மரணம் அடையும்போது மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சிரஞ்சீவி மரணமடைந்த பின்னர் முதன் முதலாக மேக்னா ராஜ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: என்னுடைய கணவர் சீருவின் மரணம் வாழ்க்கையில் எனக்கு மறக்கவே முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.

மனரீதியாக நான் நிலைகுலைந்து விட்டேன். நான் நின்று கொண்டிருந்த இடம் தனியாக செல்வது போல எனக்கு தோன்றியது. ஆனால் இப்போது நான் எந்த அளவிற்கு வலிமையாக இருக்கிறேன் என்பது குறித்து எனக்கு தெரியாது. சீரு மிகவும் வித்தியாசமான சுபாவம் கொண்ட ஆளாக இருந்தார். என்னை விட ரொம்பவே வித்தியாசமானவர். எனக்கு எல்லா விஷயத்திலும் ஒரு ஒழுங்கு முறை உண்டு. ஆனால் சீரு அதற்கு நேர் எதிரானவர். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் அனுபவித்துக் கொண்டிருந்தார். இனி நானும் அதே போல மாறப் போகிறேன். நாளை யாருக்கு என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. நமக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று சீரு எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று நான் கூறுவேன். அதிலும் சீரு சொன்னது உண்மையாகி விட்டது. குழந்தை சீருவைப் போலவே இருக்கிறான். இனி நான் அவனுக்காக மட்டுமே வாழப்போகிறேன்.

நமக்கு மகன் பிறக்கும் போது அவனை லயன் கிங் படத்தில் வரும் சிம்பாவைப் போல வளர்க்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அந்த படத்தை பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வரும். அந்த சினிமாவில் சிம்பாவை அறிமுகப்படுத்தியது போல நம்முடைய மகனையும் இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார். ஆனால் அவரது ஆசை எதுவும் நடக்காமல் போய்விட்டது. நடிப்பு என்பது என்னுடைய ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயமாகும். நான் மிகவும் விரும்புகின்ற எதையாவது கைவிட வேண்டும் என்பது எனது கணவருக்கு பிடிக்காது. இதனால் என்னால் முடியும் காலம் வரை நான் சினிமாவில் நடிப்பேன். நிச்சயமாக நான் மீண்டும் திரும்பி வருவேன். சோதனையான கட்டத்தில் நான் இருந்தபோது என்னுடைய நண்பர்களும், குடும்பத்தினரும் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். அதிலும் குறிப்பாக நடிகைகள் நஸ்ரியா மற்றும் அனன்யா ஆகியோர் செய்த உதவிகளை என்னால் மறக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை