ஒரு தெலுங்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவை இளம் நடிகர் ஒருவர் அங்கிள் என அழைத்து பேசினார். இதில் கோபமடைந்த பாலகிருஷ்ணா தன்னுடைய செல்போனை மேடையில் தூக்கி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. 60 வயதான இவர் தன்னுடைய 14வது வயதில் தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நாயகனாக நடித்துள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமராவின் மகனான இவர், கடந்த 2014ம் ஆண்டு முதல் ஹிந்துபூர் தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவாகவும் உள்ளார். இவர் நடித்த சாகசமே ஜீவிதம், ஜனனி ஜென்ம பூமி, அபூர்வ சகோதரடு, முவ்வா கோபாலடு உள்பட ஏராளமான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடின. தற்போது கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக பாலகிருஷ்ணா எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில் கங்கா சாகர் என்பவரின் இயக்கத்தில் சேஹரி என்ற படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட வேண்டுமென்று படக்குழுவினர் பாலகிருஷ்ணாவை சந்தித்து கூறினர். விழாவுக்கு வர அவரும் சம்மதித்து இருந்தார். இந்தப் படத்தில் இளம் நடிகர் ஹர்ஷ் மற்றும் சிம்ரன் சவுத்திரி ஆகியோர் ஜோடிகளாக நடிக்கின்றனர். விழாவின் தொடக்கத்தில் நடிகர் ஹர்ஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். அப்போது மேடையிலிருந்த நடிகர் பாலகிருஷ்ணாவை அவர் அங்கிள் என அழைத்துப் பேசினார். அந்த வார்த்தையைக் கேட்டவுடன் பாலகிருஷ்ணாவின் முகம் சிவந்தது. ஹர்ஷை பார்த்து அவர் முறைத்தார்.
அங்கிள் என்ற வார்த்தையால் பிரச்சனை ஆகி விட்டது என உணர்ந்த கொண்ட நடிகர் ஹர்ஷ் உடனடியாக மன்னிப்பும் கேட்டார். பின்னர் அவர் பாலகிருஷ்ணன் சார் என அழைத்தார். ஆனால் அதன் பின்னரும் பாலகிருஷ்ணாவுக்கு கோபம் தீரவில்லை. நிகழ்ச்சி முடியும் வரை அவர் மேடையில் கடுகடுப்புடன் தான் காணப்பட்டார். இந்த சமயத்தில் தான் அவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்த அவர், கோபத்தில் போனை தூக்கி வீசினார். இதனால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் சேர்ந்து போட்டோ எடுக்கும் போதும் தன்னுடைய அருகில் நின்ற நடிகர் ஹர்ஷின் கைகளைத் தட்டி விடவும் செய்தார்.
இந்த சம்பவத்தால் நிகழ்ச்சி முடியும் வரை படக்குழுவினர் கடும் பதற்றத்தில் இருந்தனர். ஏனென்றால் 16 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் தான் அதற்குக் காரணமாகும். கடந்த 2004ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் அவரது நண்பரை பாலகிருஷ்ணா துப்பாக்கியால் சுட்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் பாலகிருஷ்ணா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல மீண்டும் துப்பாக்கியை எடுத்து விடுவாரோ என்ற பயம் படப்பிடிப்பு படக்குழுவினருக்கு இருந்தது. ஆனால் நல்லவேளையாக நிகழ்ச்சியை முடித்துவிட்டு பாலகிருஷ்ணா அமைதியாகச் சென்று விட்டார். இதன் பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.