பலாத்காரம் செய்யப்பட்ட நடிகைக்கு எதிராக அவதூறு நடிகை பார்வதியின் ராஜினாமா ஏற்பு

by Nishanth, Nov 21, 2020, 10:36 AM IST

பலாத்காரம் செய்யப்பட்ட மலையாள நடிகைக்கு எதிராக அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளரைக் கண்டித்து பிரபல நடிகை பார்வதி மலையாள நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் கொச்சியில் நடந்த மலையாள நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் பார்வதியின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருப்பவர் இடைவேளை பாபு. கடந்த மாதம் இவர் ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது, நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காகத் தயாரிக்கப்படும் படத்தில் யார், யார் நடிக்கின்றனர் என்று அந்த பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. படத்தில் கதாபாத்திரங்களுக்குத் தேவையான நடிகர், நடிகைகளுக்குக் கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அவர் கூறினார். பலாத்காரம் செய்யப்பட்ட பிரபல நடிகை, நடிகர் சங்கம் தயாரித்த முதல் படத்தில் நடித்திருந்தார். அந்த நடிகைக்கு இரண்டாவது படத்திலும் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்று பேட்டியின் போது கேள்வி கேட்கப்பட்டது.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டார், இறந்த ஒருவருக்கு எப்படி படத்தில் வாய்ப்பு கொடுக்க முடியும் என்று இடைவேளை பாபு கூறினார். இந்த கருத்து மலையாள சினிமா உலகில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நடிகைகள் பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், ரேவதி உள்படப் பலர் இடைவேளை பாபுவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இடைவேளை பாபுவை கண்டித்து நடிகை பார்வதி தன்னுடைய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இடைவேளை பாபு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் மலையாள நடிகர் சங்க செயற்குழு கூட்டம் கொச்சியில் நடந்தது. தலைவர் மோகன்லால் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவர்களும், எம்எல்ஏக்களுமான முகேஷ், கணேஷ்குமார், பொதுச் செயலாளர் இடைவேளை பாபு, செயற்குழு உறுப்பினர்களான பாபுராஜ், ரஜனா நாராயணன் குட்டி மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடிகை பார்வதியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பொதுச் செயலாளர் இடைவேளை பாபுவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் பினீஷை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு எம்எல்ஏக்கள் முகேஷ் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பினீஷிடமிருந்து விளக்கம் கேட்ட பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதை ஏற்றுக்கொண்ட தலைவர் மோகன்லால் பினீஷிடமிருந்து விளக்கம் கேட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

You'r reading பலாத்காரம் செய்யப்பட்ட நடிகைக்கு எதிராக அவதூறு நடிகை பார்வதியின் ராஜினாமா ஏற்பு Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை