சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக கேரளாவில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி, கமலை சீண்டும் விதமாக கேரள அரசின் புதிய சட்டத்தை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். சமூக இணையதளங்களில் பெண்கள் மற்றும் தனி நபருக்கு எதிராக ஆபாச கருத்துக்கள் மற்றும் மிரட்டல் விடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு சைபர் குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் மீது ஐடி சட்டத்தில் 118 ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறி கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கிவிட்டது. இந்நிலையில் கேரளாவில் இந்த சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை அமல் படுத்துவதற்காக அவசர சட்டத்தை கொண்டுவர கேரள அரசு தீர்மானித்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இது கேரள கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த அவசர சட்டத்திற்கு கேரள கவர்னர் அனுமதி அளித்தார். இந்த புதிய சட்டத்தின்படி சமூக இணையதளங்களில் மட்டுமல்லாமல் பத்திரிகைகள் மற்றும் டிவிகளில் வரும் தகவல்களை வைத்தும் நடவடிக்கை எடுக்க முடியும். பத்திரிகையிலோ டிவியிலோ வரும் ஒரு செய்தி தன்னை அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்று யாராவது போலீசில் புகார் கொடுத்தால் உடனடியாக அந்த புகாரின் மீது போலீசால் வழக்கு பதிவு செய்ய முடியும். யாரும் புகார் செய்ய விட்டால்கூட போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டத்தின்படி 5 வருடம் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இந்த அவசர சட்டத்திற்கு கேரளாவில் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பா. சிதம்பரம் உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நடிகர் கமல் மிகவும் நெருக்கமானவர் ஆவார். கட்சி தொடங்குவதற்கு முன்பாக பினராயி விஜயனை கமல் அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பினராயி விஜயன் அரசை அடிக்கடி கமல் பாராட்டுவதும் உண்டு. இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பது: மரியாதைக்குரிய கமல்ஹாசன் அவர்களே, கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசு தற்போது கொண்டு வந்துள்ள கேரள போலீஸ் சட்டத்தை குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
அதிமுக மற்றும் பாஜக அரசுகளை பற்றி அடிக்கடி நீங்கள் குறை சொல்வது உண்டு. ஆனால் கேரள அரசை அடிக்கடி நீங்கள் பாராட்டி வருகிறீர்கள். கேரள அரசு கொண்டுவரும் திட்டங்கள், கொரோனா நோய் தடுப்பு முறைகள் குறித்து நீங்கள் அடிக்கடி பாராட்டி கருத்து தெரிவித்துள்ளீர்கள். தற்போது அந்த மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய அவசர சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா? இப்போதும் கேரளா அரசு குறித்த அதே கருத்து தான் உங்களுக்கு இருக்கிறதா? இவ்வாறு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார். நடிகை கஸ்தூரியின் கேள்விக்கு கமல் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.